
அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் பகுதியில் உள்ள சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெள்ளிக்கிழமை தரைவழி பாலத்திற்கு மேல் பகுதியில் செல்லும் வெள்ள நீர்
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த அரசிராமணி செட்டிபட்டி பகுதியில் சரபங்கா நதி ஆற்றில் தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருகிறது. பள்ளியின் பின்புறம் உள்ள மைதானத்தில் தண்ணீர் தேங்கி வருவதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி நிர்வாகம் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது.
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அதனையடுத்து அணையிலிருந்து அதிகமான நீர் வருவதால் கிழக்கு, மேற்கு கரை கால்வாயில் நீர் திறக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சரபங்கா நதி உற்பத்தியாகிச் செல்லும் வழிப் பகுதிகளில் தொடர்ந்து அதிகமான மழை பெய்து வருவதையடுத்து அதிக மழை நீர் சென்று வருகிறது.
இந்நிலையில், தேவூரை அடுத்த அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் உள்ள சரபங்கா நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைவழிபாலத்திற்கு மேல் தண்ணீர் சென்று பள்ளி மைதானத்திற்குள் சென்றுள்ளது.
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வந்த மாணவர்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.