
டாஸ்மாக் திறக்கக்கூடாது எனப் போராடியவர்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு மதுக்கடை திறக்கக் கூடாது என ஒரு தரப்பினரும், திறக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் மாறிமாறி சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
கோட்டூர் முள்ளியாற்றிலிருந்து அடப்பாறு பிரியும் இடத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன் அரசு மதுக்கடை திறக்க ஆயத்தப் பணிகள் தொடங்கியது.
இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் குடியிருப்பு பகுதியில் மதுக் கடை திறக்கக் கூடாது என போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், அந்த இடத்தில் தனபால் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க கட்டம் கட்டி முடித்தார். புதிய கட்டடத்தில் டாஸ்மாக் கடை திறக்க பணிகள் தொடங்கியதை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுக்கடை வராமல் தடுத்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த 4 ஆண்டு காலமாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுப்பதும், அதனை தடுத்து நிறுத்துவதுமாக நடவடிக்கை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிரச்னைக்குறிய இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்காக லாரிகளில் ஏற்றப்பட்டு வந்த மது பாட்டில் கடையை திறந்து இறக்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கோட்டூர் ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன் தலைமையில் கட்சியினர் திரண்டு வந்து டாஸ்மாக் மதுக் கடையை திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி பிரதான சாலை கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலை மறியல் ஈடுப்பட்டனர்.
சம்பவயிடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர்கள் சிவக்குமார் (கோட்டூர்), கழனியப்பன் (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், செப்டம்பர் 15-ஆம் தேதி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் மறியல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், அதே இடத்தில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே தனபால், ஆனந்தன் ஆகியோர் தலைமையில் மற்ற அரசியல் கட்சியினர் மதுப் பிரியர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
அங்கு வந்த காவல் துறையினர் கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடை திறப்பதற்காக புதிதாக கட்டப்பட்ட கடையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்கள் மீண்டும் லாரியில் ஏற்றி எடுத்து செல்லப்பட்டது.
டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது, திறக்க வேண்டும் என இரு தரப்பினரும் போட்டிப் போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், பேருந்து பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.