எலிசபெத் ராணியை வரவேற்ற கூத்தாநல்லூர் அப்துல் அஜீஸ்!

கூத்தாநல்லூரைச் சேர்ந்த ஜே.எம்.அப்துல் அஜீஸ், சமீபத்தில் மறைந்த எலிசபெத் மகாராணியின் நட்பைப் பெற்றவர்.
எலிசபெத் ராணியை வரவேற்ற கூத்தாநல்லூர் அப்துல் அஜீஸ்!

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மதிப்புமிக்க புகழ் உள்ளது. அதுபோல் திருவாரூர் மாவட்டத்திற்கு சின்ன சிங்கப்பூர் எனப் பெருமையுடன் அழைக்கக்கூடிய, வெளியில் தெரியாமல் புகழ் பெற்றவர்கள் நிறைந்த ஊர்தான் கூத்தாநல்லூர்.

கூத்தாநல்லூரைச் சேர்ந்த ஜே.எம்.அப்துல் அஜீஸ், சமீபத்தில் மறைந்த எலிசபெத் மகாராணியின் நட்பைப் பெற்றவர். ஜே.எம்.அப்துல் அஜீஸ் 1905ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 15 ஆம் தேதி, பிறந்தார். அவர், கூத்தாநல்லூரிலிருந்து, வியாபார நோக்கத்தோடு, சைமோன் என அழைக்கப்பட்ட வியட்நாம் நாட்டுக்குப் போய் உள்ளார். அங்கு வியாபாரம் செய்து மிகப் பெரிய வணிகராகியுள்ளார். 

கூத்தாநல்லூர் கமாலியாத் தெருவில், அவரது மனைவி ஆயுஷாவுக்காக, ஆயிஷா பேலஸ் என்ற மிகப்பெரிய மாளிகையைக் கட்டியுள்ளார். இன்றளவும், குறைவில்லாமல் ஆயிஷா பேலஸ் கம்பீரமாக உள்ளது. 

அப்துல் அஜீஸ் மனைவி ஆயிஷா பீவியின், அண்ணன் தீ.மு.சே. முகம்மது அப்துல் காதர் மகன் திமுஜூத்தீன்  கூறியது, 

எனது மாமா அப்துல் அஜீஸுக்கு, முகம்மது அமீன், முகம்மது பாரூக், முகம்மது இஸ்மாயில் என்ற 3 மகன்கள். மூவரும் இப்போது இல்லை. இதில், முகம்மது பாரூக் மனைவி ஜூபைதா பேகம், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச் செயலாளராக உள்ள எல்.எம்.முகம்மது அஷ்ரபின் அக்கா ஆவார். 1940, 50ஆம் ஆண்டுகளில் எல்லாம் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர் அப்துல் அஜீஸ். 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பெருந்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். அப்போதுதான், வியட்நாம் வந்த எலிசபெத் ராணிக்கு, சிறப்பான முறையில், அப்துல் அஜீஸ் வரவேற்பு கொடுத்துள்ளார். மேலும், கூத்தாநல்லூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மற்றும் பள்ளி வாயில்கள் அமைக்க என பல்வேறு வகையிலும் உதவிகள் புரிந்துள்ளார்.

சென்னை கோல்டன் ஸ்டுடியோவில் பார்ட்டனராகவும் இருந்துள்ளார். அப்துல் அஜீஸ் விலை உயர்ந்த கார் வைத்திருந்துள்ளார். அந்தக் காரை வேடிக்கை பார்ப்பதற்காகவே கூட்டம், கூட்டமாக வருவார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலாளி உங்க காரில் ஒரு ரவுண்ட் போய் வருகிறேன் எனக் கேட்டு, காரை ஓட்டிப் பார்த்துள்ளார். எனப் பெருமையுடன் தெரிவித்தார். 

அப்துல் அஜீஸின் பேரனும், மகன் முகம்மது பாரூக்கின் மகனுமான நியாஸ் கூறியது, 

எனது தாத்தா அப்துல் அஜீஸை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. வியட்நாமிலிருந்து, கூத்தாநல்லூர் ஆயிஷா பேலஸ்ஸுக்கு, தாத்தா எப்போதாவதுதான் வருவாராம். மாடியில் நின்றுகொண்டு, பைனாகுலர் மூலம், அருகில் உள்ள பனங்காட்டாங்குடி வயலைப் பார்ப்பாராம். 

துனிசியாவின் நிச்சான் இப்திகாரின் செவாலியேர் விருது, துன்சியாவின் கட்டளை தளபதி பதவி, கம்போடியாவின் சஹா மெத்ரேயின் ராயல் ஆர்டரின் கமாண்டர் கிராஸ், பிரான்சின் செஞ்சிலுவைப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களையும், பதவிகளையும் வகித்துள்ளார்கள். 1958, பிப்ரவரி 18 ஆம் தேதி, வியட்நாம் நாட்டிலேயே மறைந்து விட்டார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com