மின் கட்டண உயர்வு கவலையளிக்கிறதா?

தமிழகத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணம் என்பது, நாட்டில் உள்ள 18 மாநிலங்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை விடக் குறைவாம். அதுவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் இதே நிலைதானாம்.
மின் கட்டண உயர்வு கவலையளிக்கிறதா?
மின் கட்டண உயர்வு கவலையளிக்கிறதா?


சென்னை: தமிழகத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணம் என்பது, நாட்டில் உள்ள 18 மாநிலங்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை விடக் குறைவாம். அதுவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் இதே நிலைதானாம்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட்டது. ஏற்கனவே தாறுமாறாக வரும் மின் கட்டணம் வரும் மாதங்களில் எப்படி இருக்கப்போகிறதோ என்று மனதுக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு, சற்று ஆறுதலை அளிக்கவே இந்த தகவல்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலவும் மின் கட்டணங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அலசி ஆராய்ந்த போது நமக்குக் கிடைத்த சில தகவல்கள் இங்கே..

நாட்டிலேயே மின் கட்டணம் அதிகமாக இருப்பது ராஜஸ்தான் என்று கருதலாம். அங்கு 100 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.935ம், 200 யூனிட்டுக்கு ரூ.1,583ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 200 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.225 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

குறைந்த அழுத்த சேவை மின்சாரத்துக்கு விசைத்தறி நெசவாளர்களிடமிருந்து மகாராஷ்டிரத்தில், 750 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.7,160 மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ரூ.7,058 கட்டணம் பெறப்படுகிறது. ஆனால் இந்தப் பிரிவுக்கு தமிழகத்தில் கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால் ஒரு சில அடுக்குகளில் உள்ள முரண்பாடுகளை தமிழ்நாடு மின்சார வாரியம் பகுப்பாய்வு செய்யவில்லை என்று மின் நுகர்வோர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது குறித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், மின் கட்டண உயர்வு குறித்து திட்டமிடும்போது, அதிகாரிகளுடன், இதர மாநில மின் கட்டணங்களையும் ஒப்பீடு செய்துள்ளோம். அதன்பிறகே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே பல மாநிலங்களில், அதிகத் தேவை இருக்கும் நேரங்களுக்கு கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் முறை இருக்கிறது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம் அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைக்கு மின் பயன்பாட்டுக்கு வேறு மாற்று ஏற்பாடுகள் இல்லை. மத்திய அரசிடமிருந்தும் அழுத்தம் வருகிறது. இது மட்டுமல்லாமல், மின்சார வாரியத்துக்கு தமிழக அரசு மானியத் தொகையாக ரூ.4,000 கோடியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

கோவையின் நுகர்வோர் அமைப்பின் செயலாளர் கே. கதிர்மதியோன் கூறுகையில், தமிழக மின்சார வாரியத்தின் மின் கட்டணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். புதிய கட்டண உயர்வையும் கூட விமரிசிக்க முடியாது. கட்டண உயர்வுக்குப் பிறகும் கூட, மற்ற மாநிலங்களைவிட குறைவான கட்டணம்தான் இருக்கிறது. ஆனால், மின்வாரியம் படிப்படியாக ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்தியிருந்தால், மக்களுக்கு இந்த அளவுக்கு அதிருப்தி இருந்திருக்காது. மின் வாரியத்துக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருக்காது என்கிறார்.

தமிழக மின்வாரியம் செலவுக்கும் வருவாய்க்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து, அடுத்து லாபகரமாக இயங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் இந்தியன் காற்றாலை மின் உற்பத்திக் கழக நிர்வாகி கஸ்தூரிரங்கன் கூறுகிறார்.

ஒரு பக்கம் மின்வாரியம் மின் கட்டணத்தைக் குறைவாக வசூலித்தாலும், மறுபக்கம், இணைப்புக் கட்டணம், தேவைக்கேற்ற கட்டணம், பீக் ஹவர் கட்டணங்களை 200 மடங்கு உயர்த்தியிருந்தது என்றும் கூறுகிறார்.

பல தனியார் நிறுவனங்கள், குறைந்த மின் கட்டணத்தால், தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வருகிறார்கள். ஆனால், புதிய மின்கட்டண உயர்வால், அந்த வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உண்மைநிலையை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com