வீட்டுக் காவலில் சீன அதிபர்? இணையதளத்தில் பரவும் செய்தியால் இந்தியாவுக்கு ஆபத்தா?

சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக இணையம் முழுவதும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக இணையம் முழுவதும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஷி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் விடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

மற்றொரு தகவலில் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதி, பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் சமூக ஊடகங்களில் விடியோ வெளியாகியுள்ளது. அதாவது, ராணுவ வாகனங்கள் பெய்ஜிங் நகரத்தின் அருகில் இருக்கும் ஹுவான்லை முதல் ஷாங்ஜியாகோவ் வரை சுமார் 80 கிலோ மீட்டருக்கு வரிசை கட்டி நிற்பதாகவும், இதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த மற்றும் உயர் அதிகாரி ஷி ஜின்பிங், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதே காரணம் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

கிடைத்திருக்கும் முதற்கட்ட தகவல்களில் இருந்து, சீனாவிலிருந்து பரவி வரும் இந்த தகவல்களை உறுதி செய்ய இயலவில்லை. முன்னதாக, சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு, இரண்டு கம்யூனிஸ்ட் உயர் அதிகாரிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து வெளியான ஊடகத் தகவல்களில், சீன அதிபர் ஷி ஜின்பிங், தனது கட்சியின் முக்கிய நபர்களை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் மூன்றாவது முறையாக சீனத்தில் ஆட்சியைப் பிடிக்க எடுத்திருக்கும் வியூகம் என்று தெரிவித்திருந்தது. அக்டோபர் 16ஆம் தேதி, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது கட்சி மாநாட்டை நடத்தவும், இந்த மாநாட்டில், ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக மீண்டும் அதிபராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில்தான் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

அதுபோல, சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக உலக முன்னணி ஊடகங்களில் இதுவரை எந்த செய்தியும்/தகவலும் வெளியாகவில்லை. இதைக் கொண்டே சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் புரளியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட தகவலாகப் போகலாம்.

ஒரு வேளை, சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், சீனாவின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் இருக்கும் அனைவரும் மாற்றப்படுவார்கள். இதனால், சீனத்தின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி போன்றவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம். இதனால் சீனத்திலிருந்து வரும் பொருள்களை நம்பி இந்தியாவில் நடைபெறும் பல தொழிற்சாலைகள் பாதிக்கப்படலாம். உதிரிபாகங்கள் பற்றாக்குறை, சிப் பற்றாக்குறை போன்றவை ஏற்படலாம். கரோனா காலத்திலும் இது நடந்தது.

ஆனால், இது தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம். இந்த ஆட்சி மாற்றத்தால், சீனத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நாடலாம். சீனத்தில் தற்போது தொழில் செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் கூட இந்தியாவுக்கு மாற்றப்படலாம். எனவே, தற்காலிகமாக சில பாதிப்புகளை பொருளாதார ரீதியாக எதிர்கொண்டாலும், இந்தியாவுக்கு எதிர்காலப் பலன்கள் அதிகம் என்றே பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com