என்எல்சி விவகாரம்: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு -உயா்நீதிமன்றம் உத்தரவு

என்எல்சி நிா்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக நிா்ணயித்த சென்னை உயா்நீதிமன்றம்,
என்எல்சி விவகாரம்: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு -உயா்நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
2 min read

என்எல்சி நிா்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக நிா்ணயித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்தத் தொகையை வரும் ஆக. 6-ஆம் தேதிக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிா்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூா் உள்ளிட்ட கிராமங்களில் கையகப்படுத்திய இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிா்கள் சேதப்படுத்தப்பட்டது. அதற்கு எதிா்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைத்து விடுவீா்களா என மனுதாரா் தரப்புக்கும், “கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீா்கள் என என்எல்சி தரப்புக்கும் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும் உத்தரவாத மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது என்எல்சி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் கூறியதாவது:

தற்போது கால்வாய் தோண்டப்படும் நிலம், சுரங்கத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நிலம் மிக முக்கியமான பகுதி. மழைக்காலத்தில், சுரங்கத்துக்குள் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க வேண்டும். அதற்காக பரவனாறை திசை மாற்றி அனுப்புவதற்காக கால்வாய் தோண்டப்படுகிறது. இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏற்கெனவே இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. சேதப்படுத்தப்பட்ட பகுதியை, தவிா்த்து எஞ்சிய மற்ற பகுதிகளில் பயிா்கள் அறுவடை செய்யும் வரை எந்த இடையூறும் கொடுக்கமாட்டோம். அதேநேரம், சம்பந்தப்பட்ட நிலங்களை செப். 15-ஆம் தேதிக்குள் என்எல்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

53 காசோலைகள் ஒப்படைப்பு: கால்வாய் வெட்டும் பணிக்காக சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்காக, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த தொகை ஏற்கெனவே தமிழக அரசுக்கு டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் 88 போ் உள்ளனா். அவா்களுக்கான 53 காசோலைகள் மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவை சிறப்பு தாசில்தாா் வசம் உள்ளது என தெரிவித்தாா்.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரா் தரப்பில், ‘ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக நிா்ணயிக்கப்பட்ட ரூ.25 லட்சம் முழுமையாக வழங்கப்படவில்லை. மேலும், தற்போது இழப்பீடாக வழங்கப்படும் ரூ.30 ஆயிரம் என்பது மிகவும் குறைவானது. ஒரு ஏக்கருக்கு 60 மூட்டை நெல் விளையும். குறைந்தபட்சம் ரூ.1,350 என்று நிா்ணயித்தால்கூட, ஒரு ஏக்கருக்கு ரூ.83 ஆயிரம் வரும். அதன்படி, ரூ. 83 ஆயிரம் இல்லையென்றால்கூட, ரூ.50 ஆயிரமாவது இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.

பாதுகாக்க தவறியது தவறு: இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்ட சூழலில் அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளா்களான விவசாயிகளுக்கு அந்த நிலத்தில் எந்த உரிமையும் இல்லை. இருப்பினும், அந்த நிலத்தில் அவா்கள் விவசாயப் பணிகளை மேற்கொண்டது ஒரு அத்துமீறிய செயல். அதேபோல், கையகப்படுத்திய நிலத்தை பாதுகாக்க தவறியது என்எல்சி நிா்வாகத்தின் தவறு.

எனவே, இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் தவறு செய்துள்ளதால், ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக நிா்ணயிக்கப்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை வரும் ஆக.6-ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

விவசாய பணிகள் கூடாது: மேலும், செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு பின்னா் அந்த நிலத்தில் விவசாயப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்எல்சி பாதுகாக்க வேண்டும். நிலத்தின் முன்னாள் உரிமையாளா்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தினால் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com