குடியரசுத் தலைவர் வருகை: முதுமலை புலிகள் காப்பகத்தில் பலத்த பாதுகாப்பு

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சனிக்கிழமை வருகை தரவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் பலத்த பாதுகாப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தில் பலத்த பாதுகாப்பு
Published on
Updated on
2 min read

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சனிக்கிழமை வருகை தரவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ளார். அப்போது ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்’ குறும்படத்தின் கதாநாயகர்களான  பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

பின்னர் முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமையும் பார்வையிட்டு, அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை  சந்திக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் மாதிரி  கிராமத்தையும் குடியரசு தலைவர் பார்வையிட உள்ளார்.

தில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மைசூர் வரும் முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி வந்தடைகிறார். மசினகுடியில் இருந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வனச்சாலையில் 6 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதனால் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், 18 ஏடிஎஸ்பிக்கள், 36 ஆய்வாளர்கள் என மொத்தம் 924 காவலர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே தெப்பக்காடு யானைகள் முகாம் உட்பட முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீஸார் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் மசினகுடியில் தற்காலிகமாக ஹெலிகாப்டர் தளம் தயார் படுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் குடியரசு தலைவர் பயணம் மேற்கொள்ளவுள்ள ஹெலிகாப்டர் தரையிறக்கி ஆய்வு செய்யப்பட்டது.

இதனிடைய பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஒருவர் பழங்குடியினரை சந்திக்க நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தர உள்ளதால் குடியரசுத் தலைவருக்கு நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு விதமான பழங்குடியினர் மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆதிவாசி நலச்சங்க பிரதிநிதியும், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com