வறுமையில் தவிக்கும் "தங்க' மகன்!

ஜெர்மனியில் நடைபெறும், உயரம் குன்றியோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த ஆர். பாலசுப்பிரமணியன் இந்தியாவுக்காக பாட்மின்டன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 
வறுமையில் தவிக்கும் "தங்க' மகன்!


புதுக்கோட்டை: ஜெர்மனியில் நடைபெறும், உயரம் குன்றியோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த ஆர். பாலசுப்பிரமணியன் இந்தியாவுக்காக பாட்மின்டன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார்- அம்மாக்கண்ணு தம்பதியின் 2-ஆவது மகன் பாலசுப்பிரமணியன் (26), உயரக் குறையுள்ள மாற்றுத் திறனாளியாவார். பெற்றோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். 

இவர்களின் மூத்த மகன் விக்னேஸ்வரன் (29) காலமாகிவிட்ட நிலையில், பாலசுப்பிரமணியனுக்கு 3 தங்கைகள் உள்ளனர். இவர்கள் குடும்பம் வறுமையான சூழலில் இருக்கும் நிலையில்தான், விளையாட்டு வீரரான பாலசுப்பிரமணியனுக்கு ஜெர்மனியில் ஜூலை 28 முதல் ஆக. 5 வரை நடைபெறும், உயரம் குன்றியோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. 

அதற்கான போக்குவரத்து செலவுக்குக் கூட வழியில்லாத நிலையில், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடந்த ஜூன் மாதம் அணுகினார். அதன்பேரில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில்  பாலசுப்பிரமணியனுக்கு ரூ. 2.49 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.  

இதையடுத்து, பயிற்சியாளர் வி.சரவணன் மேற்பார்வையில் திருச்சியிலும், குஜராத்திலும் பயிற்சிகள் பெற்று, ஜெர்மனிக்கு சென்ற பாலசுப்பிரமணியன், பாட்மின்டனில் தங்கம் வென்று அசத்தினார். வரும் ஆக. 7ஆம் தேதி சென்னை திரும்பவுள்ள தங்க மகனை வரவேற்க, புதுக்கோட்டை மாவட்டம் தயாராகி வருகிறது.

இதுகுறித்து பாலசுப்ரமணியன் "தினமணி' நிருபரிடம் தொலைபேசியில் கூறுகையில், "திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.காம் முடித்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.காம் முடித்தேன். பள்ளிப் பருவத்தில் நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்டு பல்வேறு மாநில, தேசியப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். 

2019-இல் துபையில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் தங்கம் வென்றேன். உகாண்டாவில் 2022-இல் நடைபெற்ற, உயரம் குன்றியோருக்கான சர்தேச போட்டியில் பாட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். 

சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக வெற்றிகள் குவித்து வரும் நிலையில், எனது குடும்பத்தின் வறுமைநிலை, விளையாட்டுத் துறையில் எனது வளர்ச்சிக்கான தடையாக உள்ளது. பயிற்சிக்கு, திருச்சியின் ஜஸ்டினா அகாதெமி  உதவினாலும், எதிர்காலத்தில், போட்டிகளுக்குச் செல்லவும், பயிற்சிக்கும் பெருந்தொகை தேவைப்படும். 

எனவே, குடும்பத்தின் வறுமை நிலை மாறவும், போட்டிகளில் நான் பங்கேற்க தடையில்லாத வகையிலும் தமிழக அரசு எனக்கு அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்' என்றார் பாலசுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com