மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் பலி
பெங்களூரைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் ஹரீஷ்(13) என்ற பள்ளி மாணவர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானார்.
நேற்று, காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் பெங்களூரைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் ஹரீஷ் பங்கேற்றார்.
இந்த பந்தயத்தில் ஹரீஷ் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். அப்போது, எதிர்பாரதவிதமாக தலைக்கவசம் கழன்று விழுந்ததில் தலையில் பலமாக அடிப்பட்டது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (எம்எம்எஸ்சி) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பந்தயங்களையும் ரத்து செய்தது.
மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் அஜித் தாமஸ் கூறியதாவது: “இளமையும் திறமையும் கொண்ட ஒரு வீரரை இழந்தது சோகமானது. ஸ்ரேயாஸ் அபாரமான திறமை கொண்டவர். எம்எம்எஸ்சி இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது” எனக் கூறினார்.
கடந்த மாதம் தனது 13வது பிறந்தநாளைக் கொண்டாடிய எட்டாம் வகுப்பு மாணவரான ஷ்ரேயாஸ் ஹரீஷ், தேசிய அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார்.
2021 ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் பந்தையத்தில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஹரீஷ், மினிஜிபி இந்தியா பந்தயத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, கடந்த மே மாதம் ஸ்பெயினில் நடந்த மினிஜிபி பந்தயங்களில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.