கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் கோயம்பேடு சரியாகும்.. ஆனால் 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசல் குறையும் என்றாலும், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிளாம்பாக்கம்..
கிளாம்பாக்கம்..

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் குறையும் என்றாலும், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பயணிகள் வரை இங்கு வந்துச் செல்லும் வகையில் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகே ரயில் நிலையங்கள் இல்லாததால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருவோர் பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார்கள் மூலமாக பேருந்து நிலையத்துக்கு வர வேண்டியதிருக்கும். இதனால், ஜிஎஸ்டி சாலையில் ஏற்கனவே இருக்கும் போக்குவரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்காகும் வாய்ப்பு உள்ளதால், அந்தச் சாலையை பயன்படுத்துவோரும், பேருந்து நிலையத்துக்கு வருவோரும் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடலாம் என்று அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள்.

ஏற்கனவே இங்கு போக்குவரத்து நெரிசல்.. இதுவரை பேருந்துகளில் ஏறிய பிறகு போக்குவரத்து நெரிசலில் சிக்குவோர், இனி பேருந்தில் ஏறுவதற்கு இந்த நெரிசலில் சிக்கி வெளியே வர வேண்டும். இதனால் மக்களுக்கும் கூடுதல் சிக்கல்தான்.

இதனைத் தவிர்க்க, உடனடியாக அப்பகுதியில் ரயில் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், இது மிக நீண்ட கால திட்டம். ஆனால் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

புதிய பேருந்து நிலையம் வரும் பயணிகள் வசதிக்காக, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டால், ஓரளவுக்கு பயணிகள் அதனைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிக்காது என்றும் நம்பப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நகரும் படிகட்டுகள், மின் தூக்கிகள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுவிட்டது. முதன்மை பேருந்து நிலையக் கட்டடத்தின் உள் கட்டமைப்புப் பணிகளும் முடிவடையம் தருவாயில் உள்ளது. ஒரு சதவீத பணிகளே பாக்கியிருக்கும் நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத துவக்கத்தில் இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடித்து 2022-இல் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது இப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி இப்பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள் மற்றும் 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 99 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளே அதிக அளவில் இயக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம், விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்துகளால் பெருங்களத்தூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com