புத்தகம் தூக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியை தூக்கும் நிலை வருத்தமளிக்கிறது: தமிழிசை

புத்தகம் தூக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியை தூக்குவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது என்று புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். 
திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி: புத்தகம் தூக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியை தூக்குவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது என்று புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்டம், தருவை கிராமத்தில் நடைபெறும் பனை தேசியத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பனைமரம்  முழுவதும் பயன் தரும். அதனை பாதுகாக்க நாம் தவறி விட்டோம். தற்போது விதைத்தாலும் கூட அது வளர்ந்து பயன் தர பல ஆண்டுகள் ஆகும். 

அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை உருவாக்க நாம் நினைக்கிறோம். ஆனால், அவர்கள் அரிவாளை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். நான்குநேரியில் அன்மையில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.  சாதிய வேற்றுமை, மாணவர்கள் மத்தியில் உயிரை வாங்கும் அளவிற்கு இருப்பது வருத்தமாக இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகம் தூக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியை தூக்குவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.

இதற்கு முன்னால் இதேபோன்று வன்கொடுமையால் 40க்கும் மேற்பட்டோர் ஊரைவிட்டு சென்றிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதை ஏன் காவல்துறையால் இதை தடுக்க முடியவில்லை.

வேற்று மாநிலத்தை, வேறு ஊர்களை பற்றி கவலைப்படும் நமது அரசு, நமது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ள வேண்டும். காவல்துறை, அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறி விட்டதோ என தோன்றுகிறது.அரசு இந்த சம்பவத்தில் தீர ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

கர்நாடகத்தில் மாற்றுக் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடைப்பயணம் போராட்டம் என்ற நிலையை எடுத்த தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என மிதமாக நடந்து கொள்கிறது. 

இந்தி திணிப்பு
தமிழகத்தில் 40 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 50 ஆயிரம் மாணவர்கள் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. ஆனால் இந்த அரசு, இல்லாத இந்தி திணிப்பை பற்றி பேசுவதில் குறியாக உள்ளது. இந்தியை யாரும் திணிக்கவில்லை. இந்தி திணிப்பு எனக்கூறி தமிழுக்கு உள்ள பிரச்னையை மறந்து விடுகிறோம். முதலில் தமிழகத்தில் தமிழ் எந்த நிலையில் இருக்கிறது என பார்க்க வேண்டும். அதை மாணவர்களிடம் எந்த அளவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என ஆராய வேண்டும்.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 20 மாநில மொழிகளில் தமிழிலும் பாடப் புத்தகங்கள் வந்துவிட்டன. பிரதமர் மோடி உலக அரங்கில் தமிழ் மொழியை கௌரவப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதை முதலில் சரிசெய்ய வேண்டும் என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது அரசின் சாதனைகளை பிரதமர் பேசுவது இயல்பு. மணிப்பூர் குறித்து பிரதமர் பேசும்போது எதிர்க்கட்சிகள் அவையில் இல்லை. அதைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை என தமிழிசை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com