ஈரோடு: ஈரோட்டில் கடன் தொல்லை காரணமாக ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, கனிராவுத்தர் குளம் அருகே ஈ.பி. நகரில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஏடிஎம் இயந்திரத்தின் ஒயர்களை ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் ஒருவர் அறுத்து கொண்டிருப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஏடிஎம் மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் நசிமாபானு என்பதும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனது மகனுடன் வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் தறிப்பட்டறை தொழிலாளியான இவர், பல்வேறு இடங்களில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் ஈரோட்டில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து நசிமாபானுவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ஒயர் கட்டர் மற்றும் சுத்தியலை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏடிஎம் மையத்தில் பெண் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.