
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி.எஸ்.பிரபு செவ்வாய்க்கிழமை (ஆக 15) இரவு 10.30 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜி.எஸ். பிரபு (38). இவர் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி முன்னாள் அதிமுக வார்டு கவுன்சிலர். மேலும் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். சமூக ஆர்வலரான இவர் பிளக்ஸ் தயாரிக்கும் தொழில் நடத்தி வந்தார்.
தற்போது மைக்கேல்பட்டி பாம்பாளம்மன் கோயில் அருகே வசித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வேலைகளை முடித்துவிட்டு பழமார்நேரி சாலையில் உள்ள அவரது அண்ணன் வீட்டின் அருகே ஒரு கடையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இரவு 10.30 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரபுவின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆகியோர் வழக்கு பதிந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை நடந்த இடத்திற்கு தஞ்சை மாவட்ட எஸ்பி ஆஷிஷ்ராவத் நேரில் சென்று பார்வையிட்டார்.
உயிரிழந்த ஜி.எஸ். பிரபுவிற்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இச்சம்பவத்தால் செவ்வாய்க்கிழமை இரவு பழமார்நேரி சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.