ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினால் 15,000 மின் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினால் சுமார் 15,000 மின் வாரிய ஊழியர்கள் பணியிழக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. 
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினால் 15,000 மின் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினால் சுமார் 15,000 மின் வாரிய ஊழியர்கள் பணியிழக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

நாடு முழுவதும் மின் இணைப்புகளின் பயன்பாட்டைக் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசுகள் இதனை செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியுள்ளன. 

தமிழ்நாட்டில் தற்போது மின்சாரப் பயன்பாட்டினை அளவிட 'ஸ்டேட்டிக்' எனும் டிஜிட்டல் அளவீடு முறை இருக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதன்படி, ஸ்மார்ட் மீட்டர்கள் மின் வாரிய சர்வருடன் இணைக்கப்படுவதால் இரு மாதங்களுக்கு ஒருமுறை தானாகவே மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலமாக தெரிவித்துவிடும். மின் பயன்பாடு  மிகவும் துல்லியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் தானாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து இணைப்புகளுக்கும் மின் மீட்டர் பொருத்தும் செலவினை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று கூறியுள்ளது. மின் வாரியத்தில் உள்ள செலவினங்களைக் குறைக்கவும் மின் பயன்பாட்டு கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது. 

இந்நிலையில் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினால் தமிழ்நாடு மின் வாரியத்தில் 15,000 பேர் வரையில் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், தற்போது மின் ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து கணக்கீடு செய்கின்றனர். ஸ்மார்ட் மீட்டர் மென்பொருள் மூலமாக தானாகவே செய்துவிடும் என்பதால் ஊழியர்களுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

எனவே, அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மின் வாரிய  பணியாளர்கள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார், 'ஸ்மார்ட் மீட்டர்களை செயல்படுத்துவது மதிப்பீட்டாளர்கள், வருவாய் மேற்பார்வையாளர்கள், மதிப்பீட்டு ஆய்வாளர்கள் உட்பட சுமார் 15,000 தொழிலாளர்களின் வேலையை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களின் வேலைக்கான உத்திரவாதத்தை மின் வாரியமோ, அரசோ இதுவரை அளிக்கவில்லை. நிதிச்சூழல் சரியில்லாத நேரத்தில் ஸ்மார்ட் மீட்டருக்காக அரசு பெருமளவில் செலவு செய்வது பல கேள்விகளை எழுப்புகிறது. 

மின் துறை தனியார்மக்கப்படலாம் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு, மத்திய அரசிடம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. மேலும் கேரள அரசைப் போன்று மின் ஊழியர்களுக்கு வேலை உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

மற்றொரு புறம் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் கோரி பணிகள் தொடங்கி  நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்குவது குறித்து வாரியம் பரிசீலிக்கும்' என்று கூறுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com