2047-இல் இந்தியா சொல்வதை உலகமே கேட்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 

2047-இல் இந்தியா சொல்வதை உலகமே கேட்கும் என்றும், அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும். நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும் என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
2047-இல் இந்தியா சொல்வதை உலகமே கேட்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 

கோவை: 2047-இல் இந்தியா சொல்வதை உலகமே கேட்கும் என்றும், அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும். நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும் என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

கோவை பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில் நதிகளுக்காக விழா எடுக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது ஆசிவதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நொய்யல் ஆற்றுக்கு புனரமைப்பு, மறு மீட்பு வழங்கும் இந்நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

நதிகள் மீட்பு தொடர்பாக பொதுமக்களிடையே நீா் மேலாண்மை, நீரைத் தூய்மையாக வைப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது

நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆனால், பல ஆண்டு அந்நியர்களின் படையெடுப்பில் அந்த உணர்வு மறைக்கப்பட்டது. 

நீர் உள்ளிட்டவை தான் 5 பஞ்சபூதங்கள் என சொல்லி வரப்பட்டது நம் வரலாறு. ஆறுகள் தான் நாம் யார் என்பதை சொல்கிறது.

பாரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆறு என்று முதலில் சொல்லப்படுகிறது.

படையெடுப்பு, ஆக்கிரமிப்பால், இந்த உணர்வின் தொடர்பு துண்டிக்கத் தொடங்கியது. அந்நியர்கள் நம் கலாசாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள். நம் நாட்டை வலுப்படுத்துவதே நம் ஒவ்வொருவரின் கடமை.

ஆனால் தற்போது மேற்கத்திய பண்பாட்டில் வாழ்கிறோம். சமூகத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாட்டை இந்நாட்டு மக்கள் தான் உருவாக்கினார்கள், அரசு உருவாக்கவில்லை.

நிலவுக்கு போக வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. 100 ஆண்டுகளில் ராணுவ அதிகாரத்தால் ஆளப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் இந்தியா வளர்ந்தது. நிலவு அவர்களுக்கு சொந்தமில்லை. ஆனால் சில நாடுகள் அதை சொந்தம் கொண்டாட நினைக்கிறது. இருப்பினும் இந்தியாவால்தான் அதை சாதிக்க முடிந்தது. அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் நாம் வெற்றிபெற்றுள்ளோம். நம் வலிமையை காண்பித்து நிருபித்துள்ளோம்.

கரோனா தடுப்பூசி மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று சில நாடுகள் எண்ணியது போல் நாம் எண்ணாமல் பகிர்ந்து கொண்டோம். உலகத்தின் நன்மைக்காக நாம் புது வலிமையுடன், உறுதியுடன், தெளிவுடனும்  பயணிக்கிறோம். 2047 இல் இந்தியா முழுமையாக வலிமையான, வளர்ந்த நாடாக இருக்கும். 

இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவுதான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம். நீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை. அதனால், நீரை அன்னையாக பார்த்து பிரார்த்திக்க வேண்டும். ஒரு புறம் தேவை என்ற அடிப்படையில் வளமாகவும், அன்னையாகவும் பாவிக்க வேண்டும்.

அனைவரும் குடும்பம் என நம் நாடு உலக நாடுகளுக்கு தகவலாக சொல்கிறோம். ஜி20 மாநாடு மூலம் பிரதமர் அதை செய்தார்.

அனைவரும் ஒரு குடும்பமாக வாழும் நிலையில், ஒருவருக்கு பிரச்னை என்றால் அது மற்றவற்றை பாதிக்கும் என சொன்ன ரிஷிகள் நம் பாரதத்தில் உள்ளதால் அந்த பொறுப்பு நமக்கு அதிகம். அன்னியர்கள் படையெடுப்புக்கு பிறகு நாம் தனித்து விடப்பட்டோம். தொழிற்சாலை வளர்ந்தது. ஆனால், பாரதத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். நம்மை பிரிக்க பல வகைகளில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது.

எனவே, அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும். நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும் என்றார் ஆளுநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com