வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாகும்.

பசலிக்கா அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித பேராலயம், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது. பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

நிகழாண்டு ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. முன்னதாக, புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலை, ஆர்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியாக ஊர்வலம் பேராலய வளாகத்தை சென்றடைந்தது.

தொடர்ந்து, தஞ்சை முன்னாள் ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் எல்.சகாயராஜ் ஆகியோர் தலைமையில், பாரம்பரியமுறைப்படியான வழிபாடுகளை நடத்தி கொடியைப் புனிதம் செய்வித்தனர். மாலை 6.40 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.

அப்போது கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு, வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவே மரியே! மரியே வாழ்க! என முழக்கங்களை எழுப்பினர்.

பேராலயம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தஞ்சை சரக காவல் துறைத் துணைத்தலைவர் டி. ஜெயச்சந்திரன், வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவர்தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள், குருக்கள்கள் கலந்துகொண்டனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் பெருவிழாவிற்கு வந்திருந்தால், நாகை - வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும் வேளாங்கண்ணி மற்றும் நாகைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பில் சுகாதாரப் பராமரிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி செப். 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேர் பவனி செப். 7 தேதி, கொடியிறக்கம் செப்.8 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com