சிறு வணிகர்கள் கடன்: மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

மிக்ஜம் புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திடக் கோரி மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மிக்ஜம் புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திடக் கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாட்டில் 'மிக்ஜம்' புயல் வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் வழங்கிடக் கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று (14-12-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 'மிக்ஜம்' புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் 37 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர்,

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்புநிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்பிற்குள்ளான பலர் / வணிக நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுள்ள நிலையில், தங்களது நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது தவிக்கின்றனர், இந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைகளைத் தளர்த்திட வேண்டிய அவசரத் தேவை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தவணைத் தொகையைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து, கடன் தவணையையும், வட்டியையும் செலுத்துவதில் மூன்று மாதங்கள் ஒத்திவைக்க அனுமதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, பிரச்னையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில், தேவையான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com