விமான பயணிகளிடம் இந்தியை கற்க பாதுகாப்புப் படையினர் கட்டாயப்படுத்துவதா? - ராமதாஸ் கண்டனம்

இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன அறிக்கையில், சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்  பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். ‘ நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர்,’’ தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும்  இந்தி கற்க வேண்டும்” என்று உரத்தக் குரலில் கூறி தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயல் கண்டிக்கத்தக்கது.

விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் பலர், தங்களின் பணி என்ன? என்பதை மறந்து விட்டு, இந்தி தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அரசியல் கட்சியினர், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர்.  இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்ற அடிப்படைக் கூட தெரியாத அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளிடமும், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடமும் இதுகுறித்து அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது?

இந்தி தான் இந்தியாவின்  தேசிய மொழி என்ற பொய்யை காலம் காலமாக சில மத்திய அமைச்சர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் கூறி வருவதன் காரணமாகவே உண்மை தெரியாத  மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.  அவர்களின் பணி வரம்பு என்ன? என்பதையும்,  இந்தி நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான் என்பதையும் அவர்களுக்கு அவர்களின் உயரதிகாரிகள்  புரிய வைக்க வேண்டும். 

கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com