திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில்  கனமழை: தாமிரவருணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தாமிரவருணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் ஞாயிற்றுக்கிழமை  வரும் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்டத்தில்  கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில்  கனமழை: தாமிரவருணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தூத்துக்குடி​: பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15 ஆயிரம் கன அடி  நீர்வரத்து உள்ளது. மேலும் உபரி நீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரவருணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் ஞாயிற்றுக்கிழமை  வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். 

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்த நிலையில், திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சனிக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15 ஆயிரம் கன அடி  நீர்வரத்து உள்ளது. மேலும் உபரி நீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரவருணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் ஞாயிற்றுக்கிழமை  வரும் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்டத்தில் அந்த ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். 

தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரவருணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக களக்காட்டில் இருந்து சிதம்பராபுரம் செல்லும் தரைப்பாலம் மற்றும் பணகுடியில் இருந்து கோமந்தன்குளம் செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

உதவி எண்கள் அறிவிப்பு
தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1070, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உதவிக்கு - 101 மற்றும் 112, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம் - 94987 94987, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு - 104, அவரசர மருத்துவ உதவிக்கு - 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென் மாட்டங்களுக்கு விரையும் தேசிய பேரிடர் மீட்புக் குழு
தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். 

அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன. 

இந்த நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com