வெள்ளக்காடாக மாறிய கிராமங்கள்... பாப்பாக்குடி வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பாக்குடி அருகே வெள்ளத்தில்
தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்டடுள்ள கடும் வெள்ளம்
தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்டடுள்ள கடும் வெள்ளம்


சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பாக்குடி அருகே வெள்ளத்தில் சிக்கி பால் வியாபாரி ஒரு பலியானார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் முக்கூடல், பாப்பாக்குடி ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாப்பாக்குடி ஒன்றியத்தில் சிவகாமிபுரம், ரெங்கசமுத்திரம், சடையப்பபுரம், முத்துமாலைபுரம், இடைகால் உள்பட பல்வேறு கிராமங்களில் தாழ்வாக உள்ள குடியிருப்புகளுக்கு மழைநீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முக்கூடலில் பேரூராட்சி, தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

முக்கூடல் பேரூராட்சி பகுதியில் ஹரிராம் தெரு, ரஸ்தா காலனி, அமர்நாத் காலனி, சிங்கம்பாறை உள்பட பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் புகுந்தது. முக்கூடல், பாப்பாக்குடி பகுதியிலுள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

வியாபாரி பலி
திங்கள்கிழமை காலை பாப்பாக்குடி அருகேயுள்ள இலுப்பைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி துரை என்பவர், மோட்டார் சைக்கிளில் பாப்பாக்குடி அருகே இடைகால் பாலத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கியதில் உயிரிழந்தார். தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டதால் வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் முக்கூடல் - திருநெல்வேலி பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் வெள்ளோடையில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கூடல் சிங்கம்பாறை இடையே உள்ள பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. பாப்பாக்குடி அருகே இடைகால் பாலத்திற்கு மேல் வெள்ளம் சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.

காவல் நிலையத்தில் வெள்ளம்
கனமழை நீடித்து வந்த நிலையில் பாப்பாக்குடி பகுதியிலுள்ள குளங்கள் நிரம்பிய நிலையில் வெளியேறிய மழைநீர் ஊருக்குள் புகுந்தது. முக்கூடல் பாப்பாக்குடி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இடைகால் பாலத்தின் வெள்ளநீர் சென்றதால் பாப்பாக்குடி காவல் நிலையத்துக்குள் மழைநீர் புகுந்தது. திங்கள்கிழமை பகலிலும் மழை பெய்ததால் வெள்ளம் குறையவில்லை. முக்கூடல் பேரூராட்சியில் அண்ணாநகர், சடையப்பபுரம், முத்துமாலைபுரம், முக்கூடலில் வடபகுதி உள்ளிட்ட இடங்கள் தீவுபோல் காட்சியளித்தது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேரன்மகாதேவி வட்டாட்சியர் ரமேஷ் பேரூராட்சி தலைவர் லெ. ராதா, துணைத் தலைவர் இரா. லெட்சுமணன், செயல்அலுவலர் மாலதி, வருவாய் துறை அதிகாரிகள் உதவிகள் செய்தனர். மண்டபத்தில் தங்க வைத்து உணவு உள்ளிட்டவை வழங்கினர்.

குளங்கள் உடைப்பு
பாப்பாக்குடி ஒன்றியத்தில் இடைகால்,பள்ளக்கால் பகுதியிலுள்ள குளங்கள் உடைந்ததால் வெளியேறிய மழைநீர் பெருமளவில் தாழ்வாக உள்ள கிராமங்களில் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். பாப்பாக்குடி நந்தன்தட்டையில் 2 வீடுகள் இடிந்தன. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் வி.ஏ. மாரிவண்ணமுத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பொன் விஜய லட்சுமி, சொர்ணம், ஊராட்சித் தலைவர் ஆனைகுட்டி பாண்டியன், வருவாய்த் துறை அதிகாரிகள் உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com