தென் மாவட்ட மக்களை காப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 
தென் மாவட்ட மக்களை காப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!


கோவை: பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை (டிச.18) தொடங்கி வைத்து மக்களிடம் மனுக்களை பெற்றவர், தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி என தெரிவித்தார். 

கோவையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக,முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு கோவை வந்தார். பின்னர் நவஇந்தியா எஸ்.என்.ஆா். கல்லூரி அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தைத் தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார். 

பின்னர் அவர் பேசியதாவது: 
சென்னையில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால் இதனிடையே இரண்டு நாள்களாக தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது.அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டத்தில் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரைக்கும் அதிகாரிகள், அமைச்சர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறேன்.

சென்னையை சுற்றியுள்ள மக்களைக் காத்தது போல தென் மாவட்ட மக்களையும் காப்போம் என உறுதி அளிக்கிறேன். 

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் முதல்கட்டமாக 45 ஏக்கா் பரப்பளவில் 133.21 கோடியில் அமைக்கப்படவுள்ள செம்மொழிப் பூங்கா பணியை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
கண்களில் கண்ணீரோடும், வாடிய முகத்தோடும், இதயத்தில் நம்பிக்கையோடும் தலைமைச் செயலகத்தில் வரிசையாகவும், பொறுமையாகவும் நின்று மனுக்களை அளிக்கும் வயது முதிந்தோர் இன்றளவும் வருவதைக் காணமுடிகிறது. 

பொதுமக்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி வருவதை மாவட்ட ஆட்சியர்களும், மற்ற அலுவலர்களும் குறைத்திட வேண்டும். இதற்கு போதிய முயற்சிகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். 

மனுக்களை தட்டிக் கழிக்கக் கூடாது
காரணம் சொல்வபவர், காரியம் செய்ய மாட்டார் என்பது தமிழ் பழமொழிகளில் ஒன்று. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கோரிக்கை மனுக்களை தட்டிக் கழித்து விடக் கூடாது. மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசு தான்.அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு தான் இருக்கிறது என அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மக்களுடன் முதல்வர் என்பது போன்ற திட்டங்களின் மூலமாக அரசுக்கும் மக்களுக்குமாந நெருக்கம் அதிகமாகிறது.

அரசு வேறு-மக்கள் வேறல்ல
அரசு வேறு-மக்கள் வேறல்ல என்பதை உணர்த்தும் திட்டம் இது. மாநிலத்தின் வளர்ச்சியோடு மக்களும் வளர்வார்கள். தமிழ்நாட்டை இந்தியாவில் சிறந்த மாநிலமாக மட்டுமல்ல-உலகமே வியந்து பார்க்கும் மாநிலமாக உருவாக்கும் இலக்கை எனக்கு நானே உருவாக்கிக் கொண்டு உழைத்து வருகிறேன்.

விடிவு காண்பதே நோக்கம்
மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால்தான் அரசின் மீது ஏழைகள் கொண்டுள்ள நம்பிக்கைகள் வலுவடையும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com