மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இன்று மத்தியக் குழு ஆய்வு!

கடந்த இரண்டு நாள்களாக பெய்த வரலாறு காணாத வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேதங்களை மத்தியக் குழு புதன்கிழமை(டிச.20)ஆய்வு மேற்கொண்டு மதிப்பீடு செய்கிறது. 
வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்
வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த வரலாறு காணாத வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேதங்களை மத்தியக் குழு புதன்கிழமை(டிச.20) ஆய்வு மேற்கொண்டு மதிப்பீடு செய்கிறது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளை புதன்கிழமை ஆய்வு செய்யவிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை(டிச.21)நேரில் பார்வையிட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகராட்சி) இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 1,192 மிமீ மழையும், திருச்செந்தூரில் 916 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.

புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்தித்து, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பிரதமருடனான சந்திப்புக்கு முன்னதாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் புதன்கிழமை நேரில் பார்வையிட உள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மத்தியக் குழு புதன்கிழமை (டிச.20) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் அவர்களுடன் இருக்க வேண்டிய நிலையைக் கருத்தில்கொண்டு, புதன்கிழமை இரவு மதுரை சென்று அடுத்த நாள் வியாழக்கிழமை(டிச.21) தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் புதன்கிழமை இன்று இரவு மதுரை செல்கிறார்.

மேலும், அந்த பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

323 படகுகளுடன் ஒன்பது ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையில், திருநெல்வேலி யார்டு ரயில் இயக்கத்திற்கு ஏற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி வழியாக ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், மழை பாதித்த மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கிட்டத்தட்ட 19 ரயில்களை தெற்கு ரயில்வே புதன்கிழமை ரத்து செய்துள்ளது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில்,  தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையிலான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்யவுள்ளது. ஆய்வுக்கு பின்னர் வெள்ள பாதிப்பு சேதங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது இந்த குழு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com