நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம்: ஸ்டாலின்

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள நிவாரணம்
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள நிவாரணம்

சென்னை: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் லேசான பாதிப்புக்குள்ளான வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண  தொகை வழங்கப்படும். அதுபோல, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும். சென்னையைப் போலவே, தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் தடைபட்டது.

நெல்லை, தூத்துக்குடி மக்கள் இரண்டு நாள்களுக்கும் மேலாக வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் குடிநீர், உணவின்றி தத்தளித்தனர்.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் சேதடைந்தது. இன்னமும் பல பகுதிகளில் சீரமைப்புப் பணிகள்தான் நடந்து வருகிறது. 

நெல்லை மாவட்டத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று செய்தியாளர்களின் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் லேசான பாதிப்புக்குள்ளான வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண  தொகை வழங்கப்படும். தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும். தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய அரசு இதுவரை கடும் பேரிடராக அறிவிக்கவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்தது, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அளிக்க வேண்டிய தவணை தொகை தானே தவிர, கூடுதல் அல்லது நிவாரண நிதியல்ல என்றும் ஸ்டாலின் விளக்கினார்.

மேலும், வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் வரலாறு காணாத அளவுக்கு அதிகனமழை பெய்தது.

ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால், மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லையில், தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர கிராமங்கள், நகா்ப்புறங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பல பாலங்களை வெள்ள நீா் மூழ்கடித்து சென்றதால் பல வழித்தடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் மட்டுமின்றி, மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால், வீடுகளின் மேல் மாடியில் தஞ்சமடைந்த மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டனா். மீட்பு பணியில் தேசிய பேரிடா் மீட்பு படையினா், மாநில பேரிடா் மீட்பு படையினா், ராணுவ வீரா்கள், விமானப்படை, கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா்கள், மீனவா்கள், கடற்படையினா், தீயணைப்பு வீரா்கள், போலீஸாா், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

நெல்லை இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தாலும், தூத்துக்குடியில் இன்னமும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com