வைகுந்த ஏகாதசி: உற்சவத்தின் போது கீழே விழுந்த பெருமாள் சிலை!

 வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசலைக் கடந்து வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் சிலை உற்சவத்தின் போது கவிழ்ந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகுந்த ஏகாதசி: உற்சவத்தின் போது கீழே விழுந்த பெருமாள் சிலை!
Published on
Updated on
2 min read

பெண்ணாகரம் அருகே ஆலையபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசலைக் கடந்து வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் சிலை உற்சவத்தின் போது கவிழ்ந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூந்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அளியபுரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. நிகழாண்டிற்கான வைகுந்த ஏகாதேசி விழாவில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. 

கோயிலின் மூலவரான ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு பால் தயிர் தேன் துளசி பழங்கள் விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனைகள் நடத்தப்பட்டன. கூத்தப்பாடி, அளேபுரம், அக்ரஹாரம், மல்லாபுரம், பெச்சாரம் பட்டி, மடம், புதூர் உள்ளிட்ட ஏழு கிராமத்திற்குச் சொந்தமான கோவில் என்பதால் வைகுந்த ஏகாதேசி விழாவிற்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். 

விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்ட போது, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பரமபத வாசலைக் கடந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து பரமபத வாசலைக் கடந்து சாமி சிலையினை தூக்கும் கட்டளைதாரர்கள் பரவசமடைந்து கோயிலைச் சுற்றிவர சிலையின் பல்லக்கில் மேலும், கீழாகவும், முன்னும் பின்னும் அசைத்தவாறு சென்ற நிலையில் சப்பரத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி சிலை கீழே விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிடத் தொடங்கினர். 

இதனைக் கண்ட கோயில் நிர்வாகத்தினர், கட்டளைதாரர்கள் சிலையினை பிடித்து மீண்டும் சப்பரத்தில் கட்டி கோயிலுக்குள் எடுத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு தேர்த் திருவிழாவின் போது நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் கோயிலிலிருந்து பல்லக்கில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி சிலையினை வெளியே எடுத்து வரும் போது, சிலையினை உயரமாகக் கட்டியதன் காரணமாக வெளியே எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டதால் பெருமாள் சிலையின் கிரீடத்தினை கழட்டி எடுத்து வந்ததால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com