வாக்குச் சீட்டு முறை: தமிழகம் முழுவதும் டிச. 29-ல் வி.சி.க. ஆர்ப்பாட்டம்!

வாக்குச் சீட்டு முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி, விசிக கட்சியினர் டிச. 29-ல் ஆர்ப்பாட்டம்.
திருமாவளவன் (கோப்புப்படம்)
திருமாவளவன் (கோப்புப்படம்)

திருச்சி: வாக்குச் சீட்டு முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி, விசிக கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் டிச. 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 50 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தொல். திருமாவளவன் கூறியது :

மனித சமூக நீதியை நிலை நாட்டவும், விளிம்பு நிலை மக்கள் வலிமை பெற வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் பெரியார்.  அவரின் அரசியலை நீர்த்துப் போவதற்கு சில சனாதன சக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, அவரது கருத்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார்கள். பெரியார் ஒரு குறிப்பிட்ட இயக்கத்துக்கு, அரசியல் கட்சிக்கு உரிமையானவர் அல்ல. ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களுக்கும் உரிமையானவர். இதை உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து  காழ்ப்புணர்வை கக்கி கொண்டிருக்கின்றனர்.  

அவற்றை வீழ்த்தும் முயற்சியில் பெரியார், அம்பேத்கர், மார்க்சிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரண்டுள்ளோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் சமூகநீதி காண போராளிகள் ஒருங்கிணைத்து இருக்கிறோம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். 

பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறது, எதிர்க்கட்சிகளையும்,  அரசமைப்புச் சட்டத்தையும் மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். அப்படித்தான் இந்த கூட்டத்தொடரிலும் இந்த அமர்வில் முக்கிய மூன்று குற்றவியல் சட்டத்தையும், சட்டங்களுக்கான மசோதாவையும் நிறைவேற்றிட முடிவு செய்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றி எதிர்ப்பில்லாமலேயே அவற்றை நிறைவேற்றியுள்ளனர்.

இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது. மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

வருகிற 29 ஆம் தேதி தமிழக முழுவதும் ஏவிஎம் இயந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி மீண்டும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தீர்மானமும் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.

வெல்லும் சனநாயக மாநாடு சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் நடைபெறும்.

அமைச்சர் பொன்முடி வழக்கை முனைப்போடு எதிர்கொள்வதற்கு திமுக வழக்குரைஞர்கள் அனைத்து முயற்சிகளையும்  மேற்கொண்டுள்ளர். சட்டப்படி உரிய தீர்வை பெறுவார்கள்.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.900 ஆயிரம் கோடி மட்டுமே  வழங்கி உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு வழங்குகிற நிதி. ஆனால், பாதிப்புக்கு ஏற்றாற் போல புயல் மழை கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. அதை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. ரூ.21,000 கோடி கேட்டு தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சிறப்பு கூடுதல் நிதி வழங்கவில்லை என்றார் அவர்.

இந்நிகழ்வில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு, மாவட்ட செயலாளர்கள் லாரன்ஸ், கனியமுதன் வழக்குரைஞர் கலைச்செல்வன், ஆற்றலரசு, அன்புகுருசெல்வம், திருச்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் தங்கதுரை, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், திருச்சி மண்டல செயலாளர் பொன்.முருகேசன்,  மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, மாவட்டத் துணைச் செயலாளர் சிந்தை சரவணன், விஜயபாலு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com