எண்ணூர் எண்ணெய் கசிவு: கூடுதல் நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல் 

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
எண்ணூர் எண்ணெய் கசிவு: கூடுதல் நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல் 

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கடலில் கச்சா எண்ணெய் கலந்ததால் எண்ணூர் சுற்றுவட்டார மக்கள், மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 20 நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு போகாத மீனவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் குறைவாக உள்ளது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க, தற்போது அறிவித்துள்ள நிவாரண தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். 

மீனவர்களின் படகிற்கு நிவாரணமாக ரூ.50,000, கண்ணாடி இழை படகிற்கு ரூ.30,000, கட்டுமரத்திற்கு ரூ.20,000, மீன்பிடி வலைக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கொசஸ்தலை ஆற்றில் எண்ணூா் முகத்துவாரம் பகுதியில் டிசம்பா் 5-இல் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை அகற்ற தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூா் குப்பம், முகத்துவாரக் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி நகா், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகா் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடிவலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.

மேலும், இந்தக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் எண்ணெய்க் கசிவால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல இயலாததால் அவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அதைக் கருத்தில்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6,000 வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அத்தொகை ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து, கூடுதலாக எண்ணெய்க் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்த மீனவ கிராமங்களைச் சோ்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடிப் படகுகளைச் சரிசெய்ய படகு ஒன்றுக்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் ரூ.3 கோடி, அரசால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவா்களின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வாா்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.5.2 கோடி நிவாரணத் தொகை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மிக்ஜம் புயல் கனமழையால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ. 8. 68 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com