
சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பாஜகவுடன் மீண்டும் தேர்தல் கூட்டணி அமைக்குமா என்பதற்கு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
இதையும் படிக்க.. 2023 - மின் வாகனங்களின் ஆண்டு? பெரும் பிரச்சினைகள்!
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். இனி ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை இங்கே மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்துகிறேன் என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் உரையைக் கேட்ட அதிமுக தொண்டர்கள், கைதட்டி, ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் பிரச்னையில், மத்திய அரசைக் குறை கூறி திமுக அரசு தப்பிக்க நினைக்கிறது. தேசிய கட்சிகளை நம்பி இனி பிரயோஜனம் இல்லை. மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மத்தியில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆண்டாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது என்றும் கூறினார்.
முன்னதாக, பொதுக்குழு கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர்களான எம்.ஜிஆர்., ஜெயலலிதா உருவப் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமாா் உள்பட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.