புத்தாண்டு: சென்னையில் நள்ளிரவில் மூடப்படும் மேம்பாலங்கள்

சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்களை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மூடுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புத்தாண்டு: சென்னையில் நள்ளிரவில் மூடப்படும் மேம்பாலங்கள்


சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்களை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மூடுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மெரினா கடற்கரையில் புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் திரள்வார்கள் என்பதால் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

2023-ம் ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது.

நாடு முழுவதும் நாளை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட உள்ளன. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாளை இரவு 7 மணியில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். இந்த ஆண்டும் அதேபோன்று பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அங்கு தற்காலிக புற காவல் நிலையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் நாளை இரவு ஈடுபட உள்ளனர். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் சுதாகர் மற்றும் இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. மெரினாவில் நாளை இரவு குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்கரை பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக அவர்களது கைகளில் அடையாள வளையம் ஒன்றும் கட்டப்படுகிறது.

அதில் பெற்றோர்கள் மற்றும் போலீசாரின் உதவி எண்கள் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் காணாமல் போய் தவிக்கும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்பதால் இந்த நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை போலீசார் பின்பற்றி வருகிறார்கள்.

சென்னை மாநகரில் மட்டும் சுமார் 18ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தி முடிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரில் நாளை நள்ளிரவில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு விட்டு மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் மதுபோதையில் வருபவர்களை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்களை நாளை நள்ளிரவில் மூடுவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தில் வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவார்கள் அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 500 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் போலீஸ் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து அமைதியான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை மாலை முதல் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இதுபோன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப் படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்.

மேலும், அவசர மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும். பொது இடங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்கத் தடை செய்யப்பட்டு உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதிபெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரை மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு காவல் நிலையத்திற்கு 5ல் இருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது மட்டும் அல்லாது குற்ற ஆவண காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேர்க்கப்பட்டு மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com