இந்த ஆண்டு விளையாட்டுத் துறை பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. வெற்றிகள், சாதனைகள் மட்டுமல்லாது பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் உலக விளையாட்டு அரங்கில் அரங்கேறின. ஊழல் முதல் விளையாட்டின் மாண்புக்கு எதிரான செயல்கள் வரை பல்வேறு நிகழ்வுகள் அதில் அடக்கம். அவற்றுள் சிலவற்றை இங்கு காணலாம்.
உலகக் கோப்பை ஆடுகள சர்ச்சை
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான ஆடுகளத்தை கடைசி நேரத்தில் போட்டியை நடத்தும் இந்தியா மாற்றியதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையானது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இருப்பினும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் எந்த ஒரு குறையும் இல்லை என ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
டைம் அவுட் விதியில் ஆட்டமிழந்த மேத்யூஸ்
உலகக் கோப்பையில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் மிகப் பெரிய பேசுபொருளானது. இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்துக்குள் பேட் செய்யத் தவறியதாக அவருக்கு டைம் அவுட் விதிப்படி நடுவர்களால் அவுட் கொடுக்கப்பட்டது. இலங்கை அணி பேட் செய்து கொண்டிருக்கும்போது பேட் செய்ய வந்த மேத்யூஸ் தவறுதலாக பட்டை சரியில்லாத ஹெல்மட்டுடன் களத்துக்கு வந்தார். தவறான ஹெல்மட் எடுத்து வந்ததை உணர்ந்த மேத்யூஸ் மாற்று ஹெல்மட் வரும்வரை காத்திருந்தார்.
இதனையடுத்து, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் களநடுவர்களிடம் டைம் அவுட் விதிப்படி அவுட் கேக்க, நடுவர்கள் மேத்யூஸுக்கு அவுட் கொடுத்தனர். மேத்யூஸ் தனது நிலையை வங்கதேச கேப்டனிடமும், நடுவர்களிடமும் விளக்கியும் அதற்கு பலனில்லை. சர்வதேசப் போட்டிகளில் டைம் அவுட் விதிப்படி ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற விரும்பத்தகாத சாதனையையும் மேத்யூஸ் படைத்தார். கிரிக்கெட் உலகில் இந்த விஷயம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்
இந்திய மல்யுத்தத்தில் அதிர்ச்சியளிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இந்த ஆண்டு முழுமைக்கும் தொடர்ந்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் இந்திய விளையாட்டுத் துறையில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு நிகழும் அநீதியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. விளையாட்டுத் துறைக்காக தங்களது வாழ்வையே அர்ப்பணித்துள்ள விளையாட்டு வீரர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் சர்ச்சைத் தொடர்ந்தது. பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளித்தார். அதேபோல மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் தங்களது உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பியளித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிமோனா ஹாலெப் ஊக்கமருந்து விவகாரம்
விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியின்போது ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப்புக்கு டென்னிஸ் விளையாட தடைவிதிக்கப்பட்ட சம்பவம் டென்னிஸ் உலகை அதிர்ச்சியடைச் செய்தது. இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சிமோனா ஹாலெப்புக்கு ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. தான் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்றும், தன் மீதான இடைக்காலத் தடையை நீக்குமாறும் சிமோனா மேல்முறையீடு செய்தார்.
ஜெனிஃபர் ஹெர்மோசா - லூயிஸ் ரூபியேல்ஸ் முத்த சர்ச்சை
ஃபிபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் வெற்றி பெற்று சாதனை படைத்தது ஒருபுறமிருக்க, மைதானத்துக்கு வெளியே நிகழ்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ஜெனிஃபர் ஹெர்மோசாவுக்கு, ஸ்பெயின் கால்பந்து அணி கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சம்பவம் குறித்துப் பேசிய ஹெர்மோசா, உதட்டில் எனது அனுமதியின்றி முத்தம் கொடுத்தது என்னை அவமதிக்கும் செயலாக உணர்ந்தேன். இந்த குற்றச்சாட்டை மறுத்த ரூபியேல்ஸ் இறுதியில் அவரது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.
சர்ச்சையை கிளப்பிய ஜோகோவிச்
செர்பியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் டென்னிஸ் போட்டியின்போது தொலைக்காட்சி கேமராவின் மீது எழுதிய வாசகம் சர்ச்சையைக் கிளப்பியது. கொசாவோ செர்பியாவின் ஒரு அங்கம். கொசாவோவாவில் வன்முறையை நிறுத்துங்கள் என அவர் எழுதிய வாசகம் மிகப் பெரிய புயலைக் கிளப்பியது. ஜோகோவிச்சின் இந்த செயலுக்கு கொசாவோ டென்னிஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆசியப் போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு நேர்ந்த அதிர்ச்சி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரத்தை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போட்டி ஏற்பாட்டாளர்கள் குறிக்கத் தவறியது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு போட்டி ஏற்பாட்டாளர்களிடையே நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், நீரஜ் சோப்ரா மீண்டும் ஈட்டி எறிய வேண்டும் என்ற சூழல் உருவானது. மீண்டும் ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா, அந்தத் தொடரிலேயே மிக அதிக தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றபோதிலும், தொழில்நுட்பக் கோளாறைக் காரணம் காட்டி அவர் மீண்டும் ஈட்டி எறியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டது விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.