திமுக ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவு: வி.செந்தில்பாலாஜி  

அதிமுக ஆட்சி காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் குறைவாகவே இருக்கிறது என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.   
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து கிருஷ்ணம்பாளையம் காலனி, ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து கிருஷ்ணம்பாளையம் காலனி, ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.
Published on
Updated on
2 min read


ஈரோடு: அதிமுக ஆட்சி காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் குறைவாகவே இருக்கிறது என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.   

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து கிருஷ்ணம்பாளையம் காலனி, ஜீவா நகர் பகுதியில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
வாக்கு சேகரிப்பில் கூடும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒன்றரை ஆண்டு ஆட்சியின் வெற்றியை காட்டுகிறது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என  மக்கள் யாரும் சொல்லவில்லை. உள்ளாட்சி தேர்தலில் எத்தனை மாநகராட்சிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஈரோடு மாநகராட்சியில் கூட எத்தனை வார்டுகளை, அக்கட்சி வென்றது. அவர்களது ஆட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலே நடக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி கவுன்சிலர்கள் மக்கள் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. இது முதல்வர் ஸ்டாலினின் எஃகு கோட்டை. மார்ச் 2ஆம் தேதி கை சின்னம் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறது என பாருங்கள்.

ஈரோட்டில் சாலைகள் சரி இல்லை என்பது, கடந்த ஒன்றரை ஆண்டில் வந்த பிரச்னை இல்லை. பல ஆண்டாக போடப்படாத சாலை. மக்கள் கோரிக்கை வைத்ததால், நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும், டெண்டர் முடிந்து பணிகள் நடக்கும்.

இல்லாத அண்ணாமலையை பற்றி என்ன கருத்து சொல்ல. அவர்களது கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளார்கள் என கேளுங்கள். திமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மிஸ்டு கால் பார்ட்டி. அவர்கள் இத்தேர்தலில் எத்தனை பூத் கமிட்டி போட்டுள்ளார்கள். அதில் எத்தனை உறுப்பினர் உள்ளார்கள் என சொல்லட்டும். அதேநேரம் நாங்கள் 238 வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி அமைத்து, வாக்காளர்கள் சரி பார்த்துவிட்டோம்.

சட்டப்பேரவை  தேர்தலுக்குப்பின், ஒன்றரை ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய தேர்தல் வாக்குறுதியில், 85 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார்.  மீத வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறி உள்ளார்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு சாத்தியமில்லை என நான் கூறவில்லை. முதல்வர் அதை விரைவில் நிறைவேற்றுவார். கணக்கெடுப்பு செய்யக்கூடிய பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 50 சதவீதம் காலிப்பணியிடமாக உள்ளது. அதனை நிரப்ப வேண்டும். அல்லது ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்காக டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகிறது.

ஸ்மார்ட் மீட்டர் போட்டுவிட்டால், நீங்களே அப்போதும் ஒரு கேள்வி கேட்பீர்கள். ஸ்மார்ட் மீட்டார் அமைத்ததால் கணக்கீட்டாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படுமா என கேட்பீர்கள். இந்த இரண்டில் எது முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு நிறைவேற்றப்படும். சில வழிகாட்டுதலுடன், மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்படும்.

இப்பகுதியில் விசைத்தறி அதிகம் உள்ளது. கடந்த, 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தாததுபோல மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

கடந்த 2010 இல் வீடுகளுக்கு 600 யூனிட் பயன்படுத்தியவர்கள் 1,120 ரூபாய் கட்டணம் செலுத்தினர். அப்போது கருணாநிதி ஆட்சி நடந்தது. அதுவே 2017 இல் அதிமுக ஆட்சியில்  ரூ.2,440 செலுத்தினர். 117 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது.

கடந்த 2010 இல் விசைத்தறியில் 1,000 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.310 ரூபாய் செலுத்தினர். அதுவே 2017 இல் ரூ.715 செலுத்தினர். ரூ.405 உயர்த்தி உள்ளனர். 103 சதவீதம் உயர்த்தி இருந்தனர்.  இதுபோல, ஒவ்வொரு செக்டாரிலும் உயர்த்தி உள்ளனர். அதை கணக்கிட்டு பாருங்கள்.

தற்போது விசைத்தறிக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாகவும், கைத்தறிக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். 

எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com