
தன் மகன் பாலசந்திரனை பலிகொடுத்துவிட்டு பிரபாகரன் வெளிநாடு தப்பிச் சென்றிருப்பாரா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சீமான் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நம்முடைய தமிழக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்தச் சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இதையும் படிக்க | பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம்!
தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், சின்ன மகன் பாலச்சந்திரனை பலி கொடுத்துவிட்டு பிரபாகரன் உயிரோடு தப்பியிருப்பார் என சொல்வது சரியல்ல. எந்தச் சூழலிலும் நாட்டைவிட்டு செல்ல மாட்டேன் என சொன்ன அவர் தப்பி சென்றிருப்பாரா?
இதையும் படிக்க: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு!
அப்படி சென்றிருந்தாலும் போர் முடிந்து பதினைந்து ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியிருப்பார் என நினைக்கிறீர்களா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும், பெரியாரிடம் கடவுள் இல்லை என சொல்கிறீர்களே கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டனர். அதற்கு அவர் கடவுள் இருக்கிறார் என்று சொல்வேன் என பதிலளித்தார். அதுபோலத்தான் பிரபாகரன் நேரில் வந்தால் பார்க்கலாம் என்று சீமான் பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.