நெற்பயிர் பாதிப்புக்கான இழப்பீடு ஒரு வாரத்தில் வழங்கப்படும்: முதல்வர் தகவல்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை இன்னும் ஒரு வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியினை ஆய்வு செய்து வரைப்படத்தை பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மன்னார்குடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியினை ஆய்வு செய்து வரைப்படத்தை பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அண்மையில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை இன்னும் ஒரு வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்ற, திமுக மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு இல்ல திருமண விழாவினை தலைமையேற்று நடத்திவைத்து முதல்வர் பேசியது: 

நான் முதல்வராக பதவியேற்றப் பின் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், சில மாநிலங்களும், வெளி நாடுகளுக்கும் சென்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சி, பூரிப்பை விட எனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு வந்திருக்கும் போது கம்பீரம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் இது போன்ற சுயமரியாதை திருமணங்கள் சட்ட அங்கீகாரம் இல்லாமல் நடைபெற்று வந்தது.1967 ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அவர் போட்ட முதல் கையொழுத்து இதற்கு முன்னும் இனி வரும் காலங்களிலும் நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லுப்படியாகும் என சட்டத்திற்கு கையெழுத்தினை போட்டார். இது சீர்திருத்த திருமணம், சுயமரியாதை திருமணம் மட்டும் அல்ல தமிழ் முறைப்படியான திருமணமாகும்.

நம் தாய் மொழி தமிழுக்கு தான் கருணாநிதி முதல்வராக இருந்த போது செம்மொழி தகுதியை பெற்று தந்தார்.சட்டப் பேரவைத் தேர்தலின் போது திமுக தந்த வாக்குறுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம்.இன்னும் உள்ள 3 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

அரசின் திட்டங்கள், சட்டங்கள் அறிவித்து விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்காமல் இவைகள் நிதி பற்றாக்குறையாலா அல்லது அதிகாரிகளின் மெத்தனப்போக்கு என எந்த காரணத்தினால் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது என்பதை அறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் தான் மாவட்டந்தோறும் கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டம் செயல்படுத்தி வருகிறேன்.விரைவில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு நடைபெறும்.

திமுக ஆட்சி காலங்களில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன் விவசாயிகள், விவசாய சங்கத்தினர், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், சிறுகுறு தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்து ஆய்வு செய்த பின்தான் வரிவிதிப்பு, சலுகைகள் அடங்கிய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தான் வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

மன்னார்குடியில் திமுக மாவட்ட ஊராட்சி தலைவர் தலையா மங்கலம் ஜி.பாலு இல்ல திருமண விழாவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
மன்னார்குடியில் திமுக மாவட்ட ஊராட்சி தலைவர் தலையா மங்கலம் ஜி.பாலு இல்ல திருமண விழாவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

அண்மையில், காவிரி டெல்டா மாவட்டங்களான கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தாயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து விவாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் அறிந்து மாநில உணவுத்துறை, வேளாண்துறை அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்து சேதங்களை பார்வையிட்டு என்னிடம் அறிக்கை சமர்பித்தனர்.

அதன் அடிப்படையில், மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அந்த கணக்கு எடுப்புகள் கணினியில் பதிவேற்றப்பட்டு வருகிறது. எனவே இன்னும் ஒரு வாரத்தில், சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என்றார்.

இந்த விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் ரா.முத்தரசன், திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு, நாகை எம்பி எம்.செல்வராஜ், எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, க.மாரிமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

பின்னர், திருமண நடைபெற்ற இடத்திலிருந்து புறப்பட்ட முதல்வர், மன்னார்குடி நடேசன் தெருவில் செயல்பட்டு வந்த நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அதன் எதிரே உள்ள சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் ஆகியவற்றை இடித்து விட்டு தமிழகஅரசின் நிதியில் ரூ.29.76 கோடியில் நவீன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.

இதற்கான பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருவதை முதல்வர் அங்கு வந்து பார்வையிட்டார். மேலும்,புதிய பேருந்து நிலையத்தில் வரைப்படம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, எம்பி டி.ஆர்.பாலு, எம்எல்ஏகள் பூண்டி கே.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, நகர்மன்ற தலைவர் த.சோழராஜன், ஆணையர் கே.சென்னுகிருஷ்ணன், பொறியாளர் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com