
சென்னை: சென்னை அயனாவரத்தில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்திய வழக்கில் கைது செய்து அழைத்து வரப்பட்ட இளைஞர், காவலரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்ததினால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மு.சங்கர் (49). இவர், அயனாவரம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிகிறார். சங்கர், பெண் காவலர்கள் மீனா, அன்பரசி, வெஸ்லின் ஆண்ட்ரியா, தனலட்சுமி ஆகியோருடன் கடந்த 20 ஆம் தேதி அயனாவரம் கொன்னூர் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 நபர்கள் வந்தனர். அவர்களை சங்கர் மறித்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்த நபர்கள், தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் சங்கரை பலமாக தாக்கினர். இதில் சங்கர் மயங்கி கீழே விழுந்ததும், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் காவலர்கள், பலத்தக் காயமடைந்த சங்கரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த கோ.சூர்யா (22), அவரது கூட்டாளிகள் கெளதம், அஜித் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த கெளதம், அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதையும் படிக்க | தமிழக நிதிநிலை அறிக்கை: மாா்ச் 2-ஆவது வாரத்தில் தாக்கல்?
தப்பியோட முயற்சி:
அதேவேளையில் முக்கிய குற்றவாளியான பெண்டு சூர்யா, திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள அவரது சகோதரி வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அயனாவரம் காவல் நிலைய தனிப்படை போலீசார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அங்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த சூர்யாவை கைது செய்தனர்.
பின்னர் அங்கிருந்து சூர்யாவை சென்னைக்கு காரில் அழைத்து வந்தனர். அவர்கள், அயனாவரம் நியூ ஆவடி சாலையில் வேலங்காடு சுடுகாடு அருகே வரும்போது, சூர்யா சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறினாராம். இதையடுத்து போலீசார், அவரை வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையோரம் விட்டனர். அப்போது சூர்யா, திடீரென அங்கிருந்த ஒரு பழரச கடையில் இருந்த கத்தியை எடுத்து காவலுக்கு வந்த போலீசார் சரவணக்குமார், அமானுதீன் ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு தப்பியோட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு:
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் உதவி ஆய்வாளர் மீனா, தனது கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சூர்யாவை தப்பியோட முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், சூர்யா அங்கிருந்து தப்பியோடினாராம். இதைப் பார்த்த மீனா, சூர்யாவை நோக்கி தனது கைத்துப்பாக்கியால் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சூர்யாவின் இடது கால் முட்டியின் கீழ் பகுதியில் தோட்டா பாய்ந்தது. இதனால் சூர்யா, ஓட முடியாமல் அங்கு கீழே விழுந்தார். மேலும், அவரது கால் பகுதியில் இருந்து அதிகமாக ரத்தம் வெளியேறியது.
இதையடுத்து மீனா உள்ளிட்ட போலீசார், சூர்யாவையும், தாக்குதலில் காயமடைந்த பேலீசார் சரவணக்குமார், அமானுதீன் ஆகிய 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா மீது ஏற்கெனவே திருட்டு,வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், சூர்யா காவல் ஆய்வாளர் சங்கரை தாக்கிய நாளன்றும் அயனாவரம் பகுதியில் உள்ள 3 வீடுகளில் திருடிவிட்டு தப்பியோடி வந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் உயர் அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.