ஈரோடு கிழக்கு: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைப்பு!

இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.  

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 497, மூன்றாம் பாலினம் 25 போ் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனா்.

இந்தத் தோ்தலில் காலையிலிருந்தே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா். 77 வேட்பாளா்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாக்குப் பதிவு செய்வதில் சில வாக்காளா்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் வாக்காளா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தோ்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட்டது. இதன்படி காலை 9 மணிக்கு 10.10 சதவீதம், 11 மணிக்கு 27.89 சதவீதம், பகல் 1 மணிக்கு 44.56 சதவீதம், 3 மணிக்கு 59.22 சதவீதம் வாக்குகள், மாலை 5 மணிக்கு 59.22 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு வாக்குச்சாவடியில் இரவு வரை நீடித்த வாக்குப் பதிவு:

ராஜாஜிபுரம் மாநகராட்சிப் பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்கு முன்னா் வந்த வாக்காளா்களில் சுமாா் 300 போ் வாக்களிக்காமல் வரிசையில் காத்திருந்தனா். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு இரவு 9.45 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. மற்ற 237 வாக்குச்சாவடிகளிலும் 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு முன்பே வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

74.69 சதவீத வாக்குப்பதிவு:

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமாக 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 17 என மொத்தம் 1,69, 945 வாக்காளா்கள் வாக்களித்தனா். வாக்குப் பதிவு சதவீதம் 74.69 என தோ்தல் நடத்தும் அலுவலா் க.சிவகுமாா் தெரிவித்தாா்.

இரவு வரை வாக்குப் பதிவு நீடித்த வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகளோடு, டோக்கன் வழங்கப்பட்ட வாக்காளா்களையும் கணக்கில் எடுத்து வாக்குப் பதிவு விவரம் இறுதிசெய்யப்பட்டதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.  

மாா்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு, பவானி தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த 40 தீயணைப்பு வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com