செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிலைப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ்

செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிலைப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ்
Published on
Updated on
2 min read

செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
கரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் இன்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த செவிலியர்களை பணிநீக்கியிருப்பது நியாயமல்ல.

இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கிய போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக 3200 செவியர்கள் நியமிக்கப் பட்டனர். அவர்களில் 800 பேர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், மீதமுள்ள 2400 செவிலியர்களையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அவற்றை கனிவுடன் பரிசீலிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து விட்டு, 2400 செவிலியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.

சாதாரண காலங்களில் பணியாற்றுவதற்கும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கொரோனா காலத்தில் பணியாற்ற பலரும் முன்வராத காலத்தில், 3,200 செவிலியர்களையும் கட்டாயப்படுத்தி தான் தமிழக அரசு பணியில் சேர்த்தது. அவர்களும் கொரோனா காலத்தின் அச்சங்களையும், நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டு பணியாற்றினார்கள். கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்ட போதும், மூன்றாவது அலை ஏற்பட்ட போதும் செவிலியர்களின் பணி தேவைப்பட்டதால் அவர்களின் ஒப்பந்தக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இப்போது நான்காவது அலை ஏற்படும் என்று அஞ்சப்படும் சூழலில் அவர்களை பணியில் தொடர அரசு அனுமதிக்க வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் எந்த வகையிலும் தகுதி, திறமை குறைந்தவர்கள் அல்ல. பணி நிலைப்பு செய்வதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் கடந்த 07.02.2019 அன்று வெளியிட்ட 02/MRB/2019 என்ற அறிவிக்கையின் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் மூலமாக இட ஒதுக்கீடு, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து  நடைமுறைகளையும் பின்பற்றி தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. 3,600&க்கும் கூடுதலான செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மிகவும் ஆபத்தான கொரோனா பெருந்தொற்று காலத்தில் செவிலியர்கள் பணியாற்றியதை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் அவர்களின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து விட்டு, அவர்களை காலியாக உள்ள இடங்களில் அமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com