ராமபிரான் பாரத கலாசாரத்தின் அடையாளம்: தியாகராஜ ஆராதனை விழாவில் ஆளுநர் பேச்சு!

நம் பாரத நாட்டு கலாசாரத்தின் அடையாளமாக ஸ்ரீ ராமபிரான் திகழ்கிறார் என்று தியாகராஜ ஆராதனை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். 
விழாவில் பேசுகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
விழாவில் பேசுகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
Published on
Updated on
1 min read


தஞ்சாவூர்: நம் பாரத நாட்டு கலாசாரத்தின் அடையாளமாக ஸ்ரீ ராமபிரான் திகழ்கிறார் என்று தியாகராஜ ஆராதனை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176 ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் புதன்கிழமை காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:

இந்த இடத்தில்தான் தியாகராஜ சுவாமிகள் ராமபிரானை மனதில் கொண்டு ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை பாடியுள்ளார். 

ஒவ்வொருவரின் இதயத்திலும் ராமபிரான் இடம் பெற்றுள்ளார். நம் பாரத கலாசாரத்தின் அடையாளமாக ராமபிரான் திகழ்கிறார். ராமபிரானால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நம் நாட்டு மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாடு எந்தவொரு சர்வாதிகாரிகளாலும் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், தியாகராஜ சுவாமிகள் போன்ற கவிகளாலும்தான் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல்கள் உள்பட அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த நாடு தோற்றுவிக்கப்பட்டது. 

இந்த சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது. அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே நம் பாரதத்தின் வளர்ச்சியாக இருக்கிறது.

பக்திதான் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது. இந்த பக்தி மூலம் தியாகராஜ சுவாமிகள் ஏராளமான கீர்த்தனைகளை பாடி  இறைவனை அடைந்தார். இவரைப் போன்ற பக்தர்களால்தான் இந்த பாரதம் உருவாக்கப்பட்டது.

ராமபிரான் மீதான பக்தி நாடு முழுவதும் நிலவுகிறது. இதனால், நம் பாரதம் ஆன்மீக உணர்வுடன் கூடிய புண்ணிய பூமியாக திகழ்கிறது.

நமது பாரத நாடு 18 ஆம் நூற்றாண்டு வரை உலகத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய வல்லரசாக திகழ்ந்தது. அதன் பிறகு வந்த காலனியாதிக்கத்தால் பின்னடைவு ஏற்பட்டது. நாமெல்லாம் சோழ வம்சத்தினர். இன்னும் 25 ஆண்டுகளில் நம் நாடு உலக அளவில் தலைமை தாங்கும் நிலை உருவாக உள்ளது என்றார் ஆளுநர்.

ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சபா செயலர் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் வரவேற்றார். நிறைவாக, சபா செயலர் ஸ்ரீ முஷ்ணம் வி. ராஜா ராவ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com