‘பொங்கல் நாளில் வங்கித் தேர்வு உறுதி’: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் 

பொங்கல் தினத்தில் வங்கித் தேர்வு நடைபெறுவதில் மாற்றமில்லை எனும் ஸ்டேட் வங்கியின் பதிலுக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். 
‘பொங்கல் நாளில் வங்கித் தேர்வு உறுதி’: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் 
Published on
Updated on
1 min read

பொங்கல் தினத்தில் வங்கித் தேர்வு நடைபெறுவதில் மாற்றமில்லை எனும் ஸ்டேட் வங்கியின் பதிலுக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாரத ஸ்டேட் பாங்க் கிளர்க் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியானது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை (ஜனவரி 15) அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு தேதியை மாற்றக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தார். 

எனினும் வங்கி தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் தேர்வு தேதியினை மாற்றிடக்கோரி வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் எஸ்பிஐ வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

மேலும், எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரின் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், செல்லக்குமார் ஆகியோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்துவதாகத் தெரிவித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக சு.வெங்கடேசன் தெரிவித்தார். 

இந்நிலையில் ஸ்டேட் வங்கி சு.வெங்கடேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேர்வு தேதியை மாற்றுவதில் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள சு.வெங்கடேசன் எம்பி, “தமிழர் திருநாளில் SBI முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று 12 மணி நேரம் காத்திருந்து போராடினோம். மாண்புமிகு தமிழக முதல்வரும் தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால் இனிமேல் தேர்வுத்தேதியை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது ஒன்றிய நிதியமைச்சகம். 20 நாட்களுக்கு முன்பே தெரிந்தும் கயமைத்தனத்தை கடைபிடிக்கிறது ஒன்றிய அரசு. 

எங்கள் திருநாளினை தேர்வு நாளாக்கி எங்கள் கொண்டாட்டத்தை பதற்றமாக மாற்றியிருக்கிறீர்கள். 13000 தேர்வர்களும், பலநூறு அலுவலர்களும் நாளை பொங்கல் கொண்டாடாமல் தேர்வு மையம் நோக்கி அலைந்து கொண்டிருப்பர். எங்களின் பண்பாட்டையும், உரிமையையும், அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது. தமிழர் விரோத பாஜக வை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் 15ஆம் தேதி வங்கித் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com