பென்னிகுயிக் மணி மண்டபத்தில் பொங்கல் வைத்து விவசாயிகள் கட்சியினர் மரியாதை!

கா்னல் ஜான் பென்னி குயிக்கின் 182 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்தும் பொங்கல் வைத்து படைத்தும் மரியாதை செலுத்தினர்.
பென்னிகுயிக் மணி மண்டபத்தில் பொங்கல் வைத்து விவசாயிகள் கட்சியினர் மரியாதை!


கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னி குயிக்கின் 182 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்தும் பொங்கல் வைத்து படைத்தும் மரியாதை செலுத்தினர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஆதாரமாக உள்ளது  முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் ஜன.15 அன்று பொங்கல் பண்டிகையும் சேர்ந்து வந்ததால் விவசாயிகள் பொங்கல் வைத்தும் மாலை அணிவித்தும் கொண்டாடினர்.

தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பென்னிகுயிக் உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பென்னிகுயிக் உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் எம்.எல்.ஏ.க்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், ஆட்சியர் க.வீ.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது அமைச்சர் ஐ.பெரியாசாமி கூறியது, கேரள மாநிலத்தோடு நல்லுறவு வைத்துக்கொண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் சர்வே ரத்து
பாலமுத்தழகு குழுமம் மற்றும் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பென்னிகுயிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கேரள அரசு டிஜிட்டல் சர்வேவை ரத்து செய்ய வேண்டும், தமிழக எல்லை பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும், லண்டன் மாநகரில் பென்னிகுயிக்கிற்கு சிலை அமைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் கூறினார். அவருடன் உத்தமபாளையம் அரசு வழக்குறைஞர் பி.எம்.தர்மர், ஆதில் ஆம்ஸ் நிறுவனம் எச்.எம்.ரகுமத்துல்லா, உத்தமுத்து பாசன கால்வாய் சங்க தலைவர் முகமது ராவுத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் கம்பம், கூடலூர் அதிமுகவினர் பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் எம்.சதீஷ்பாபு தலைமையில் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் பொங்கல் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் முல்லைச்சாரல் விவசாய சங்க நிர்வாகிகள் கொடியரசன், ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காலை முதல் மாலை வரை சமூக அமைப்புகள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பென்னிகுயிக் மணிமண்டபத்திற்கு வந்து மரியாதை செலுத்தி சுற்றிப் பார்த்து சென்றனர்.
.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com