கனியாமூர் பள்ளி மாணவியின் கைப்பேசியை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு

கனியாமூர் தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய கைப்பேசியை ஏற்றுக் கொள்ள விழுப்புரம் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கனியாமூர் பள்ளி மாணவியின் கைப்பேசியை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு
கனியாமூர் பள்ளி மாணவியின் கைப்பேசியை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு


விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய கைப்பேசியை ஏற்றுக் கொள்ள விழுப்புரம் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய கைப்பேசியை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க அவரது தாய் செல்வி விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தாம் இந்த கைப்பேசியை ஒப்படைக்க வந்ததாக செல்வி தெரிவித்தார். ஆனால், கைப்பேசியை தாம் பெற்றுக் கொள்ள முடியாது என்றும், சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் தலைமைக்குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி புஷ்பராணி தெரிவித்தார். இதையடுத்து செல்வி, தனது மகள் ஸ்ரீமதி பயன்படுத்திய கைப்பேசியை சிபிசிஐடி விசாரணை அலுவலரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவருடன் வழக்குரைஞர்கள் பாபு, பெல்ஷியா ஆகியோர் உடன் சென்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளி பிளஸ் 2 மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி அவரது தந்தை சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா். மாணவி பயன்படுத்திய கைப்பேசி விசாரணைக்காக ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுவரை ஸ்ரீமதி பயன்படுத்திய செல்லிடப்பேசி சிபிசிஐயிடம் ஒப்படைக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய கைப்பேசி விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களில் காவல்துறையின் விசாரணை முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மாணவியின் தந்தை தரப்பில், பள்ளித் தாளாளா் உள்ளிட்டோருக்கு உயா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை விடியோ பதிவு மற்றும் ஜிப்மா் மருத்துவா்களின் அறிக்கை ஆகியவை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

தனது மகள் கைப்பேசி வைத்திருக்கவில்லை என்றும், விடுதி வாா்டனின் கைப்பேசியில் இருந்தே பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி குறுக்கிட்டு, கைப்பேசியை ஒப்படைப்பதில் என்ன பிரச்னை உள்ளது. ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும் என்றும் கேள்வி எழுப்பினாா்.

அத்துடன், மாணவி பயன்படுத்திய கைப்பேசி இருக்கிறதா?இல்லையா? என கேள்வி எழுப்பினாா். அதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவி தந்தை தரப்பு வழக்குரைஞா் கூறினாா். ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் சட்டப்படி குற்றம் எனவும் அதற்காக விசாரிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, கைப்பேசி இருந்தால் உடனடியாக அதனை ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், மாணவியின் செல்லிடப்பேசியை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஸ்ரீமதி தாயார் வந்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்காமல், சிபிசிஐடியிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி திருப்பி அனுப்பியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com