கருட சேவை உற்சவத்தையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்!

பூம்புகார் நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருட சேவை உற்சவத்தையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்!
Published on
Updated on
2 min read

பூம்புகார்: பூம்புகார் நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவெண்காடு அருகே நாங்கூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் 11 வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக உள்ளது. 

திருமங்கை மன்னன் திரு குறவளூரில் பிறந்து அரசாட்சி புரிந்ததாகவும், பிறகு பெருமாள் மீது கொண்ட பற்றால் அரசாட்சியை துறந்து திருமங்கை ஆழ்வாராக, பெருமாள் மீது ஆயிரக்கணக்கான பாசுரங்களை பாடியதாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன. 

ஆண்டுதோறும் 11 பெருமாள்கள் நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருட சேவை உற்சவம் நடைபெறும். 

நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கருட சேவை உற்சவத்தை ஒட்டி திருமங்கை ஆழ்வார் மற்றும் பெருமாள்கள் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளியினர். இதனை அடுத்து அனைத்து பெருமாள்களுக்கும் அபிஷேகம் நடந்தது. 

இதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் கோவிலின் வாயிலில் எழுந்தருளினர்.  

இதனிடையே திருமங்கை ஆழ்வாரை சுமந்து வந்த பக்தர்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து பணியாளர்கள் கோவிலை விட்டு வெளியேறினர். 

இதனையறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் திருமங்கை ஆழ்வாரை விழா பந்தலுக்கு பக்தர்கள் சுமந்து வந்தனர். இதனை அடுத்து ஒவ்வொரு பெருமாள்களைப் பற்றி பாடிய பாசுரங்களை ஆழ்வார் முன்னிலையில் பட்டாச்சாரியார்கள் பாடினார்கள். 

பின்னர் திருமங்கை ஆழ்வார் மற்றும்மணவாள மாமுனிகளும் 11 பெருமாள்களை சுற்றி வலம் வந்தனர். அதிகாலை 2.30 மணி அளவில் ஒரே நேரத்தில் தீபாரதனை காட்டப்பட்டு கருட சேவை உற்சவம் நடந்தது. 
அப்போது அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாராயணா நாராயண என சரண கோஷமிட்டனர். 

இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், பொதுநல சங்கத் தலைவர் அன்பு, பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

விழாவை ஒட்டி நாராயண பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை கிராம பொறுப்பாளர்கள் முன்னிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து என்ன வேண்டும் என்றும், பக்தர்களின் காணிக்கையை கருட சேவை உற்சவத்திற்கு எழுந்தருளியுள்ள 11 பெருமாள் கோவில்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டுமென இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வரும் ஆண்டிலாவது முறையான விழா ஏற்பாடுகளை செய்யவும், தனியார் அமைப்பினர் கருட சேவை விழாவை ஒட்டி நன்கொடை பெறுவதை தடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com