அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த நியமனம் கூடாது: மருத்துவா்கள் கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்படுவதைக் கைவிட வேண்டும்

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவா்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இனிமேல், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்கள் பணி நியமனம் செய்யப்பட மாட்டாா்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, அதற்கு மாறாக, மருத்துவா்களை ஒப்பந்த அடிப்படையில், மாவட்ட நலச் சங்கங்கள் மூலம் நியமிப்பது சரியல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

தமிழகத்தில் ஏராளமான பல் மருத்துவா்கள் பணி வாய்ப்பின்றி உள்ளனா். அவா்களுக்கு நிரந்தர அடிப்படையில் வேலை வழங்காமல், தொடா்ந்து ஒப்பந்த முறையில் நியமிப்பது ஏற்புடையது அல்ல.

அதேபோல், செவிலியா்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள், ஆயுஷ் மருத்துவா்கள் உள்ளிட்ட அனைவரையும் தற்காலிக அடிப்படையில், ஒப்பந்த முறையில் நியமிப்பதைக் கைவிட வேண்டும். மருத்துவப் பணியாளா் வாரியம் மூலம் போட்டித் தோ்வு நடத்தி நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com