மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையார்  திருக்கல்யாணம்!

அம்மையார் திருக்கல்யாணத்தை தரிசிப்பது திருமணமாகாதோர், சுமங்கலிப் பெண்களுக்கு மிகுந்த விசேஷமென கருதப்படுவதால், மண்டபம் உள்ளேயும், வெளியேயும் திரளானவர்கள் கலந்துகொண்டனர். 
மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையார்  திருக்கல்யாணம்!


காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. சனிக்கிழமை அம்மையாா் மணிமண்டபத்தில் பரமதத்தா் - புனிதவதியாா் (காரைக்கால் அம்மையாா்) திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில், 63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் 4 நாட்கள் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. முன்னதாக கைலாசநாதா் கோயிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து பரமதத்தா், ஆற்றங்கரை சித்தி விநாயகா் கோயிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊா்வலமாக இரவு அம்மையாா் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு புனிதவதியாா் தீா்த்தக் கரைக்கு (அம்மையாா் குளம்) எழுந்தருளும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்தா் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் அம்மையாரின் திருக்கல்யாண உற்சவம் அம்மையார் மணிமண்டபத்தில் தொடங்கியது.  
 
திருக்கல்யாணத்துக்கு முன்னதாக காலை திருக்குளக்கரைக்கு  புனிதவதியார் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.  குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பட்ட பரமதத்தர் அம்மையார் கோயிலுக்கு எழுந்தருளிச் செய்யப்பட்டார்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில், சிறப்பு ஹோமம் நடத்தி, திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியர்கள் மேற்கொண்டனர். 

கன்னிகாதானம் செய்து, தொடர்ந்து பரமதத்தர் சார்பில் சிவாச்சாரியர் அம்மையாருக்கு 11  மணியளவில் திருமாங்கல்யதாரணம் செய்தார். அப்போது பக்தர்கள் அட்சதையை அவரவர் தலைமீது போட்டுக்கொண்டு அம்மையாரை வழிபட்டனர். 

அம்மையார் திருக்கல்யாணத்தை தரிசிப்பது திருமணமாகாதோர், சுமங்கலிப் பெண்களுக்கு மிகுந்த விசேஷமென கருதப்படுவதால், மண்டபம் உள்ளேயும், வெளியேயும் திரளானவர்கள் கலந்துகொண்டனர். 

திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகள் இருக்கை மாறி அமரவைக்கப்பட்டது. தொடர்ந்து 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன.

திருக்கல்யாணத்தில் பங்கேற்றோர், திருமணத்தில் மொய்ப்பணம் வைப்பதுபோல, சுவாமிகளுக்கு காணிக்கைகளை செலுத்தினர்.

சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ், பயிற்சி ஆட்சியர் சம்யக் எஸ்.ஜெயின் மற்றும் அறங்காவல் வாரியத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மாலை கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் வெள்ளைச்சாற்றுடன் சிவதாண்டவம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை  ஸ்ரீ சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சப்பரத்துக்கு பின்னால் செல்லும் பக்தா்கள் மீது மாங்கனிகள் வீசப்படும்.

திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சார்பில் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com