தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்: தமிழகத்தில் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி, சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு இடங்களில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

வேம்பனேரியில் அவர் மக்களிடையே பேசும்போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் வழிநடத்திய கட்சிக்கு பொதுச் செயலாளராகும் வாய்ப்பு இந்த மண்ணை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ளதற்கு பெருமை.

நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் தார் சாலை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டது.

ஆதனூர் குமாரமங்கலம், கரூர் அருகில் ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டித் தந்தோம். நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்த மாநிலம் என்பதை உருவாக்கி காட்டினோம்.

மேட்டூர் அணையையும் தூர்வாரினோம். நாள் ஒன்றுக்கு 3000 லாரிகள் மூலம் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கினோம்.

இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 மருத்துவக் கல்லூரி ஒரே ஆண்டில் கொண்டு வந்தோம். மூன்று கால்நடை கல்லூரி, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா இவை எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அதனை கிடப்பில் போட்டு விட்டனர். அதனை நிறைவேற்றி இருந்தால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பலன் அடைந்து இருப்பார்கள். விவசாயிகளுக்கு எந்தெந்த வகையில் நன்மை செய்ய முடியுமோ அந்த வகையில் நன்மை செய்தது அதிமுக அரசு. நெசவாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் தந்தோம்.

பேரவையில் திறமையான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல்வரால் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை.

செந்தில் பாலாஜியை கைது செய்த போது மத்திய அரசு பழி வாங்குவதாக ஸ்டாலின் கூறுகிறார். செந்தில் பாலாஜி அதிமுகவில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தர பணம் வாங்கியதாக ஸ்டாலின் தான் முதன்முதலில் ஊழல் குற்றச்சாட்டு கூறினார்.

இன்று அதே செந்தில் பாலாஜியை மத்திய அரசு பழி வாங்குவதாக கூறுகிறார். நீதிமன்ற உத்தரவுபடி தான் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.

செந்தில் பாலாஜி கலால் துறையில் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளார். முதல்வரும், அமைச்சர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள செந்தில்பாலாஜியை சென்று பார்க்கின்றனர்.

கட்சிக்காக உழைத்த துரைமுருகனை யாரும் மருத்துவமனையில் சென்று பார்க்கவில்லை. ஐந்து கட்சிகளுக்கு சென்று வந்த செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றனர்.

செந்தில் பாலாஜி கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி ஸ்டாலினுக்கு போய் உள்ளதால் அப்படி நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், எடப்பாடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் துரை என்கிற மாதேஸ்வரன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மாதேஷ், எடப்பாடி ஒன்றிய குழு பெருந்தலைவர் குப்பம்மாள் மாதேஷ், எடப்பாடி வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com