
கம்பம்: தேனி மாவட்டம் குமுளி மலை வனப்பகுதியில் விவசாயம் செய்ய அனுமதிக்கக் கோரி 3 - ஆவது நாளாக ஆண்கள், பெண்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு பகுதியில் உள்ள அமராவதிபுரம், ஆசாரி பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்தவர்களின் குடும்பத்தினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை வனப்பகுதிக்கு சென்றனர்.
அங்கு கூடாரம் அமைத்து தங்கினர். கம்பம் மேற்கு வனச்சரக எல்லையில் இருப்பதால் வனத்துறையினர் அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தினர். ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி விவசாயம் செய்யப்போவதாக கூறி கொட்டும் மழையிலும் சமையல் செய்து தங்கி வருகின்றனர்.
இது பற்றி வனத்துறையினரிடம் கேட்ட போது, மாவட்ட வன அலுவலர் மூலம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றனர். குமுளி காவல் நிலைய காவல் துறையினரிடம் கேட்ட போது, வனத்துறை இதுவரை எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றனர்.
3வது நாளாக கொட்டும் மழையில் வனப்பகுதியில் ஆண், பெண் உள்ளிட்ட 25 பேர்கள் தங்கியிருப்பதில் வருவாய், காவல், வனத் துறையினர் அக்கறை காட்டாமல் அலட்சியமாக இருப்பதாகவே இப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர்.
கொட்டும் மழையிலும், வன விலங்குகளுக்கு மத்தியில் தங்கியிருப்பது, 25 மனித உயிர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.