தமிழ்நாடு கால்பந்து அணி வீராங்கனைக்கு சொந்த ஊரில் வரவேற்பு!

தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் பெற்ற தமிழ்நாடு கால் பந்து அணியின் வீராங்கனைக்கு சொந்த ஊரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
சொந்த ஊருக்கு வந்த தமிழ்நாடு அணியின் கால்பந்து வீராங்கனை எஸ்.பிரியதர்ஷினியை வரவேற்று மாலைகள் அணிவித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் கீழநாலாநல்லூர் கிராமத்தினர்.
சொந்த ஊருக்கு வந்த தமிழ்நாடு அணியின் கால்பந்து வீராங்கனை எஸ்.பிரியதர்ஷினியை வரவேற்று மாலைகள் அணிவித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் கீழநாலாநல்லூர் கிராமத்தினர்.

தேசிய சீனியர் மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற தமிழ்நாடு அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனை எஸ்.பிரியதர்ஷினிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கீழநாலாநல்லூரில் ஊர் மக்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கீழநாலாநல்லூரைச் சேர்ந்த செல்லத்துரை - பொன்னி தம்பதியரின் மகள் பிரியதர்ஷினி(22). இவர் சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு கால்பந்தாட்ட பயிற்சியினை பெற்றவர். பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று பல்வேறு பரிசுகளைப் பெற்று தான் படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய சீனியர் மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற தமிழ்நாடு அணியின் வீராங்கனைகள்.
தேசிய சீனியர் மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற தமிழ்நாடு அணியின் வீராங்கனைகள்.

பள்ளிப் படிப்பினை முடித்த பின், பிரியதர்ஷினி கும்பகோணம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் பிரிவு எடுத்து படித்தவர். தற்போது அதே கல்லூரியில் எம்எஸ்சி கணிதம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு கோவாவில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்தாட்டப் போட்டியில் தமிழ்நாடு அணியில் முதல்முறையாக இடம் பெற்று விளையாடினார். இதில், தமிழ்நாடு அணி சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றது.

இந்நிலையில், ஜூன் 28 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற 27-ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியில் பிரியதர்ஷினி பங்கேற்று விளையாடினார்.

இந்த போட்டியில், முதல்பாதியில் ஹரியாணா அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது பாதியில் தமிழ்நாடு வீராங்கனை பிரியதர்ஷினி அடித்த கோல் தமிழ்நாடு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இதனை தொடர்ந்து, வீராங்கனை இந்துமதி அடித்த மறுகோலால் ஹரியாணாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி

இந்த வெற்றியை தொலைக்காட்சி மூலம் பார்த்த பிரியதர்ஷினியின் பெற்றோர், ஊரைச் சேர்ந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், பஞ்சாபிலிருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு கால்பந்து வீராங்கனைகள், திங்கள்கிழமை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதனையடுத்து, தனது சொந்த ஊரான மன்னார்குடி அடுத்த கீழநாலாநல்லூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த தமிழ்நாடு அணியின் கால் பந்து வீராங்கனை எஸ்.பிரியதர்ஷினிக்கு, சவளக்காரன் ஊராட்சி தலைவர் ஆர்.சாந்தி தலைமையில் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டு பின்னர் சந்தன மற்றும் மலர் மாலைகள் அணிவித்து அவரது உறவினர்கள், ஊர் மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுடன் வானவேடிக்கைகளுடன் மேலதாளத்துடன் ஊர்வலமாக சவளக்காரன் ஆதிதிராவிடர் அரசுப் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார், மன்னார்குடி கால்பந்து அணி தலைவர் அசோகன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.பாப்பையன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக கீழநாலாநல்லூரில் உள்ள பிரியதர்ஷியின் வீட்டுக்குச் சென்றனர்.

சவளக்காரன் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று வரும் நிலையில் இந்த பள்ளியில் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு திடல் இல்லை என பள்ளி நிர்வாகம் கூறிவந்த நிலையில், இது குறித்து அறிந்து அண்மையில் இப்பள்ளிக்கு வந்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, விளையாட்டு திடல் அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். பின்னர், விரைவில் தரம் வாய்ந்த விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என உறுதி அளித்துவிட்டுச் சென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com