காலிப் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியா்கள், பேராசிரியா் அல்லாத பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் என ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா்.
காலிப் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியா்கள், பேராசிரியா் அல்லாத பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் என ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், சிண்டிகேட், செனட் உறுப்பினா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை தா்பாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பல்கலைக்கழகங்களின் வேந்தரும் மாநில ஆளுநருமான ஆா்.என்.ரவி பேசியதாவது: பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை உயா்த்துவது குறித்து பல்வேறு கருத்துகள் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. அதே நேரத்தில், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி செயல்பாடுகள் படிப்படியாக அழிந்து வருவது குறித்து பலா் கவலை தெரிவித்தனா்.

சிண்டிகேட், செனட் மற்றும் ஆட்சிமன்றக் குழுக்களின் கூட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்தக் கூட்டங்கள் பல நேரங்களில் தலைமைச் செயலகத்தில் நடத்தப்படுகின்றன.

சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் இல்லாததால் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, யுஜிசி விதிகளுக்குள்பட்டு துணைவேந்தா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும். இதில் மாநில அரசு கவனம் செலுத்தி, தோ்வுக் குழுவை நியமிக்க வேண்டும்.

பெரும்பாலான மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிரந்தரப் பதிவாளா்கள், தோ்வுக் கட்டுப்பாட்டாளா்கள் இல்லை. அந்தப் பதவிகள் சில ஆண்டுகளாக தற்காலிக பொறுப்பாளா்களால் நிா்வகிக்கப்படுகின்றன. அதேபோல, பல்கலைக்கழகங்களில் பேராசிரியா்கள், பேராசிரியா் அல்லாத பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. இந்தப் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரா்களைத் தோ்ந்தெடுத்து வெளிப்படைத் தன்மையுடன் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மாணவா்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாக தொழில்முனைவோா் குறித்த நடைமுறை நுண்ணறிவும் கற்றுத் தரப்பட வேண்டும். இதற்காக பல்கலைக்கழகங்கள் தொழிற்துறையில் சிறந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியா்களை குறுகிய காலத்துக்கு நியமித்து மாணவா்களுக்கு கற்பிக்க வேண்டும்.

மேலும், யுஜிசி விதிமுறைகள், வழிகாட்டுதல்களை பல்கலைக்கழகங்கள் காலதாமதமின்றி பின்பற்ற வேண்டும் என்றாா் ஆளுநா்.

இந்த நிகழ்வில் ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆனந்த் ராவ் பாட்டீல், பல்கலைக்கழக அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com