
திருப்பூர்: திருப்பூரை அடுத்த நல்லூர் அருகே காவல் வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி தாயின் கண் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(28). இவரது மகள் திவ்யதர்ஷினி (6) . இவர் விஜயபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், ராஜேஸ்வரி தனது இரு சக்கர வாகனத்தில் மகள் திவ்யதர்ஷினியை அழைத்துக் கொண்டு நல்லிகவுண்டன் நகர் அருகே புதன்கிழமை மாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த காவல் துறை வாகனம் புவனேஸ்வரியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், புவனேஸ்வரியும் காயமடைந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொதுமக்கள் காவல் துறை வாகனத்தை இயக்கி வந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த சின்னகண்ணன் (28) என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூர் காவல் துறையினர் வாகன ஓட்டுநரான சின்னக்கண்ணனை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக காங்கயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: காவல் துறை வாகனத்தை இயக்கி வந்த சின்னக்கண்ணன் மதுபோதையில் இருந்துள்ளார். அவர் வேகமாக வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே, சின்னக்கண்ணனைக் கைது செய்வதுடன், சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
முன்னதாக சம்பவ இடத்துக்கு மாநகர காவல் துணை ஆணையர் வனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண் முன்னே 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.