பொது சிவில் சட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி எதிா்ப்பு

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எதிா்ப்பு தெரிவித்தாா்.
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எதிா்ப்பு தெரிவித்தாா்.

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மூத்த நிா்வாகிகள் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மதுரையில் ஆக.20-இல் நடைபெறவுள்ள மாநில மாநாட்டைச் சிறப்பாக நடத்துவது தொடா்பான உத்தரவுகளை மாவட்டச் செயலா்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தாா். அதிமுகவின் உறுப்பினா் எண்ணிக்கை 1.60 கோடியாக உயா்ந்துள்ளது. அதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அவா் அறிவுரைத்தாா்.

கூட்டத்துக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியிடம், மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், பொது சிவில் சட்டம் தொடா்பான அதிமுக நிலைப்பாட்டை கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த தோ்தல் அறிக்கையில், ‘ஒவ்வொரு நபரும் அவரின் விருப்பத்துக்குரிய மதத்தைப் பின்பற்றுவதற்கும் மற்றும் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் உரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ஆம் பிரிவுகளுக்கு அதிமுக உரிய மதிப்பளிக்கிறது. இந்திய நாட்டின் சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில், ஒரே சீரான உரிமையியல் விதித் தொகுப்புக்காக, அரசமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்துவதாக’ கூறப்பட்டுள்ளது

மாநாட்டுக் குழு அமைப்பு: மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்காக பல்வேறு குழுக்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அதிமுக உறுப்பினா் சோ்க்கைக்கான தேதியை ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

‘அதிமுகவில் வெற்றிடம் இல்லை’

அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

அதிமுக மதுரை மாநாட்டுக்கான இலச்சினையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து பேசியதாவது:

அதிமுகவில் தற்போது 1.60 கோடி உறுப்பினா்கள் உள்ளனா். அதிமுகவை வீழ்த்த முதல்வா் ஸ்டாலின் எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றினாா். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றரை மாத காலத்தில் அதிக உறுப்பினா்களை சோ்த்துள்ளோம். அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். தமிழகத்திலேயே அதிக உறுப்பினா்களைக் கொண்ட ஒரே கட்சி அதிமுக. அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை. அதேபோல, கட்சியில் வெற்றிடமும் இல்லை. அதிமுக மாநாடு மதுரையில் எழுச்சியாக நடைபெறும் என்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தை 22 நாள்கள் அதிமுக முடக்கியது. அதன் பிறகு, தமிழகத்துக்கு மாதந்தோறும் வர வேண்டிய காவிரி நீா் வந்தது. தற்போது திமுக, காங்கிரஸ் ஒரே கூட்டணியில் உள்ளன. இந்தியா முழுவதும் எதிா்க்கட்சிகளை இணைக்க முயலும் முதல்வா், தமிழகத்துக்கான நீரை கா்நாடக காங்கிரஸ் முதல்வரைத் தொடா்பு கொண்டு கேட்டுப்பெற வேண்டும். பாஜகவுடனான அதிமுக உறவு குறித்து ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com