முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால்..! ஜார்க்கண்ட் ஆளுநர்

யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால் அமைச்சரை பதவியிலிருந்து விலக்கியிருப்பேன். 
முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால்..! ஜார்க்கண்ட் ஆளுநர்
Published on
Updated on
2 min read

முதல்வர் ஸ்டாலின்  இடத்தில் நான் இருந்திருந்தால், கண்டிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறிது காலம் பதவியில் இருந்து விலகி இருங்கள் என்று சொல்லி இருப்பேன் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக  வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு மலர் தூவி பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்பளித்தனர். 

ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக கோவை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் . பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பிரதமர் தமிழர்கள் மீதும், தமிழகம் மீதும் மகத்தான நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால் தான் மூன்று தமிழர்கள் நான்கு மாநிலங்களில் ஆளுநர்களாக இருக்கின்றனர். இது தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த பெருமையாக கருதவில்லை. இது தமிழ் இனத்துக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். பொறுப்பேற்ற பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு , அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகை புரிந்திருக்கிறேன். 

ஆளுநர்களின் செயல்பாடு மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை பொறுத்து  அமைந்துள்ளது. ஆளுநர் என்பவர் ஏதோ அதிகாரம் செய்ய வந்ததாக கருதக்கூடாது. அரசியல் சட்டத்தின் படி மாநில அரசு செயல்படுவதை ஆளுநர்  உறுதிபடுத்துகின்றார். மணிப்பூரை பொறுத்தவரை ஒரு வழக்கு தீர்ப்பு வந்தது,  அதில் இரு பிரிவுகளுக்கு இடையே பகை இருந்த நிலையில் அது மீண்டும் மேலே வந்திருக்கிறது. 

கலவரங்கள் நடைபெற்று வருகிறது, இப்பொழுது படிப்படியாக  கலவரம் கட்டுப்படுத்தபட்டு வருகின்றது. கலவரத்தை  கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை, அதை அரசியலாக்காமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் குறிப்பிட்ட கிராமத்தில் குடிக்கும் தண்ணீரில் மலம் கலக்கப்பட்டுள்ளது. இதை அரசியலக்காமல், குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். 

முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால், கண்டிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீங்கள் சிறிது காலம் பதவியில் இருந்து விலகி இருங்கள் என்று சொல்லி இருப்பேன். உங்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனில்,  மீண்டும் இணைத்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பேன். அப்படி நடப்பதுதான் சரியான அரசியல் நடத்துவதற்கு உதவும். இதை தனி நபரின் மீது எடுக்கும் நடவடிக்கையாக பார்க்க கூடாது. 

பொது சிவில் சட்டம் என்பது இந்து சட்டமல்ல, அனைவருக்கும் பொதுவான சட்டம்,  இதை அனைவரும் ஆதரிக்க வேண்டும். இது  சமுதாயத்தை ஒருமைப்படுத்தும். வேகமாக மாறிவரும் ஒரு பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் இருக்கின்றது. மேற்கு வங்கத்தில் முறையாக தேர்தல் நடைபெற்றதா? இதை எத்தனை முற்போக்குவாதிகள் கண்டித்து இருக்கிறார்கள்,  பெரியார் வாரிசுகள் என்று சொல்லி கொள்பவர்கள் முத்தலாக், பொது சிவில் சட்ட விவகாரங்களில் ஏன் அமைதி காக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளிடத்தில்  ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடாது என்பது எங்கள் வேலையல்ல, அவர்களை ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதிகாரத்திற்காக ஒற்றுமை கொள்வது வேறு, நாட்டு மக்களின் நன்மைக்காக ஒன்று சேருவது என்பது வேறு என்று  ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com