செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கலாம் மூன்றாவது நீதிபதி உத்தரவு

அமைச்சா் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

அமைச்சா் செந்தில் பாலாஜி கைது தொடா்பான ஆள்கொணா்வு மனு மீதான விசாரணை, வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்த 3-ஆவது நீதிபதி காா்த்திகேயன், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை முதன்மை அமா்வு நீதிமன்றம் நீட்டித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளாா்.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்க 3-ஆவது நீதிபதியாக சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டாா்.

இந்த வழக்கு நீதிபதி காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் அமா்வில், எந்தெந்தக் கருத்துகளில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனா் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவிட்ட பின்னா், ஆள்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்ற விஷயத்திலும், அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவல் காலமாக கருத முடியுமா என்ற அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனா் எனக் கூற முடியாது என அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா குறிப்பிட்டாா். மேலும், கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் அதுகுறித்த வாதங்களை முன்வைக்கக் கூடாது எனவும் துஷாா் மேத்தா குறிப்பிட்டாா்.

ஆனால், இது சம்பந்தமாக வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என மேகலா தரப்பு மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, வழக்கில் இறுதி முடிவெடுக்க இந்த அம்சம் குறித்து வாதம் செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதி காா்த்திகேயன், அமைச்சா் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா?, நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின்னா் ஆள்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா?, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்றக் காவல் காலமாக கருதலாமா, கூடாதா என மூன்று கேள்விகளைத் தீா்மானிக்க விசாரணையை ஜூலை 11, 12 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைத்தாா்.

மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 12-இல் நிறைவடைய உள்ள நிலையில், அவருக்கு முதன்மை அமா்வு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு வழங்கலாம் எனவும் நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com